ETV Bharat / state

சென்னை கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்!

author img

By

Published : Jul 14, 2023, 4:33 PM IST

சென்னை கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்
சென்னை கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்

‘கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை அருகே உள்ள கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.

சென்னை: சென்னைக்கு அருகே உள்ள கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகளின் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் இன்று நடத்தியது.

‘கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். மாணவர்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சதுப்புநில காடுகளுக்கு சிறப்பு கவனம் அளித்து, நடைபெற்று வரும் “பசுமைத் திருவிழாவின்” ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கடலோர பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் சமூக மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக சதுப்புநில காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் மக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளுமாறு மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். மாணவர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடையே சதுப்புநில காடுகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சதுப்பு நில தாவரங்களுக்கு உள்ளூர் மொழியில் பெயர் வைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தொகுத்துள்ள “உயிரி பன்முகத்தன்மை மற்றும் சதுப்புநில சூழலியலின் முக்கியத்துவம்” என்ற புத்தகத்தையும் மத்திய அமைச்சர் யாதவ் வெளியிட்டார். இந்தியாவிலும், இந்தோனேசியா உள்ளிட்ட இதர நாடுகளிலும் ஏற்கனவே இருந்து வரும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியாவின் கடலோர மாவட்டங்களில் சதுப்புநில காடுகளை மீண்டும் வளர்க்கும் நோக்கத்துடன் ‘மிஷ்டி’ திட்டத்தை இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

கடலோர மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, சதுப்பு நில காடுகளுடன் தொடர்புடைய சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா முன்முயற்சிகளை உருவாக்குவது முதலியவை இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றார். சிஓபி27 மாநாட்டின் போது தீவிர உறுப்பினராக இந்தியா விளங்கிய காலகட்டத்தில், சதுப்புநில காடுகளை ஊக்குவிப்பதற்காக நாடுகளிடையே உருவாக்கப்பட்ட பருவநிலைக்கான சதுப்புநில காடுகள் கூட்டணி என்ற முன்முயற்சியில் ‘மிஷ்டி திட்டம்’ பெரும் பங்கு வகிக்கும் என்று கூறினார்.

தற்போது 5000 சதுர கிலோமீட்டர் தூரம் அளவுக்கு சதுப்புநில காடுகள் இருந்து வரும் நிலையில், மிஷ்டி திட்டத்தின் கீழ் 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில், கூடுதலாக 540 சதுர கிலோமீட்டர் காடுகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023-2024 முதல் 2027-2028 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு இத்திட்டத்தை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஈடுசெய் காடு வளர்ப்பு மேலாண்மை, திட்டமிடல் ஆணைய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் இதர ஆதாரங்களின் உதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சதுப்பு நில காடுகளை வளர்ப்பதற்காக மொத்தம் 39 சதுர கிலோமீட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Kalakshetra: கலாக்ஷேத்ரா பாலியல் விவகாரம்: ஓரிரு நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.