ETV Bharat / state

'உணருங்க யூனியன் வங்கி...' - நிர்வாணமே நிரந்தரம்!

author img

By

Published : Oct 12, 2021, 7:29 PM IST

Updated : Oct 12, 2021, 8:39 PM IST

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/12-October-2021/13336400_ubi1.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/12-October-2021/13336400_ubi1.jpg

'பிரச்னை இங்கு உடையல்ல, உடையைக் காரணியாக வைத்து மதம், சாதி, அதிகாரத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையும், வன்முறைகளுமே'

உலகம் படைக்கப்பட்டபோது ஆதாம், ஏவாள் கடவுளின் பேச்சை மீறி விஷப்பழத்தை உட்கொண்டதால், அவர்களுக்கு வெட்கம் உண்டானதாக பைபிளில் ஒரு கதை உண்டு.

அப்போது தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்து, வெட்கம் கொண்ட அவர்கள், இலைகளை உடைகளாக உடுத்தத் தொடங்கியதாகவும் கதையின் கூற்று.

நிற்க! எதற்காக ஒரு கட்டுரையின் முகப்பில் சம்பந்தமே இல்லாமல் குறிப்பிட்ட ஒரு மத நம்பிக்கைக்கதையின் வரலாறு? இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன தொடர்பு எனத் தோன்றுகிறதல்லவா. ஆம், சம்பந்தம் உண்டு. தொடர்ந்து படியுங்கள், இதற்கான காரணியை கட்டுரையின் கடைசியில் காணலாம்.

பொதுத்துறை வங்கியின் அவல நிலை

ஆரம்பத்தில் இலைகளில் தொடங்கிய உடையின் வரலாறு, பின்னர் ஒவ்வொரு நாட்டின் தட்பவெப்பம், கலாசாரத்திற்கு ஏற்ப பல்வேறு மூலப்பொருள்களால் தயாரிக்கப்படத்தொடங்கியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

உடைகளின் பரிணாம வளர்ச்சி ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்று தானே. ஒப்பனைகளை விரும்பாத மனிதர் யார் இங்கு? என நீங்கள் வினவுவதும் சரிதான். பிரச்னை இங்கு உடையல்ல, உடையைக் காரணியாக வைத்து மதம், சாதி, அதிகாரத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையும், வன்முறைகளுமே.

ஆம், அப்படியொரு சம்பவமே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என உலக அரங்கில் மார் தட்டிக் கொள்ளும் இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் தேசியமயமாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை வங்கியில்.

உத்தரவை மீறினால் அபராதம்

அக்டோபர் 1ஆம் தேதி... நிறுத்து! நிறுத்து! எழுதியதைப் பார்த்தபோது இன்று நடந்த சம்பவம் என்றல்லவா நினைத்தோம். நீ என்ன இறந்து புதைத்த செய்தியை மையக்கருவாகக் கொண்டு எழுதுகிறாய்? என வாசகர்கள் எண்ணுவது சரியே. ஆனால், என்ன செய்ய? இறந்து புதைத்த செய்தியேயாயினும் அதிகாரமீறல் குறித்து பேசியாக வேண்டுமே. வாருங்கள் கட்டுரையின் உள்ளே செல்வோம்.

அக்டோபர் 1ஆம் தேதி யூனியன் வங்கியின் பொது மேலாளர் ஏ.ஆர். ராகவேந்திரா சர்சைக்குரிய சுற்றறிக்கை ஒன்றினை, தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் அனுப்பியுள்ளார்.

அதில் நவராத்திரி பண்டிகையையொட்டி வருகின்ற அக்டோபர் 7 முதல் 15ஆம் தேதி வரையிலும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட ஒவ்வொரு நிற உடைகளில் அலுவலகம் வர வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோருக்கு ரூ. 200 அபராதம் வேறு.

யூனியன் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை
யூனியன் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை

அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்தரவு

நவராத்திரி விழா கொண்டாடுவதில் ஓர் வங்கி நிர்வாகம் முனைப்புக்காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? நல்ல விஷயம் தானே, விளம்பரப் புகழ் சேருமே என்று தானே எண்ணத் தோன்றுகிறது.

ஆம், நல்ல விஷயம்தான். ஆனால், அது பிறரின் ஆடை சுதந்திரத்தையும், மத நம்பிக்கையையும் பாதிக்காத வரையில். யூனியன் வங்கி இந்துக்களுக்கு மட்டுமே பொதுவுடைமையாக்கப்பட்ட வங்கியா என்பதே இங்கு கேள்வி.

கடந்த 100 ஆண்டு கால இந்திய வரலாற்றில், எந்த ஒரு வங்கி நிர்வாகமும் இப்படியொரு உத்தரவினை பிறப்பித்து ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதில்லை. யூனியன் வங்கியில் பணிபுரிவோர் அனைவருமே இந்துக்களா? பிற மதத்தைச் சேர்ந்த ஊழியர்களே பணியில் இல்லையா?

இவ்வாறிருக்க ஒரு குறிப்பிட்ட மதத்தின் இறைவழிபாட்டு நிகழ்ச்சியினை அனைத்து ஊழியர்களுமே கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடுவது அதிகார மீறல் அல்லாமல் வேறென்ன?

ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சகட்டம்

பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சரியெனவே வைத்துக் கொள்வோம்.

ஒரு வேளை யூனியன் வங்கியில் பணிபுரிவோர் அனைவரும் இந்துக்களாகவே இருக்கும்பட்சத்திலும், அனைத்து ஊழியர்களுமே விதவிதமான வண்ண உடைகளை உடுத்தும் அளவுக்கு பொருளாதார தன்னிறைவு பெற்று விட்டனரா?

குறிப்பிட்ட நிறத்தில் உடை வாங்க பணமில்லாத ஊழியர் ஒருவர், அபராதம் செலுத்த நேரிடுவது நியாயமற்றதல்லவா. வங்கி ஊழியர்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிட பொது மேலாளருக்கு எள்ளளவும் அதிகாரமில்லை என அரசியலமைப்பு சரத்தில் கூறப்பட்டிருப்பதை அறிந்தும், சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டிருப்பது ஜனநாயக கேலிக் கூத்தின் உச்சகட்டம்.

சமீபத்தில் வங்கியின் சுற்றறிக்கைக்கு மக்களவை உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ஜோதிமணி, தொழிலாளர் நலச்சங்கங்கள் எனப்பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

மக்களவை உறுப்பினர் சு,வெங்கடேசனின் கண்டன அறிக்கை
மக்களவை உறுப்பினர் சு,வெங்கடேசனின் கண்டன அறிக்கை

இதனையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட வங்கி நிர்வாகத்தினர், சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தனர். ஆக, குரல் எழுப்பாத வரையிலும் அதிகார அத்துமீறல்கள் தொடர்வது வாடிக்கையாகிப் போனது.

புரையோடிப் போன வங்கி நிர்வாகம்

கதர் துணி வாங்கப் பணமில்லாமல், உடையின்றி தவித்த மக்களின் துயர் கண்டு 'அரையாடை' உடுத்திய காந்தியின் தேசமிது. காந்தி அன்று கண்ட நிலை இன்றும் தொடர்வதே யதார்த்தம்.

அப்படியிருக்கையில் பொதுத்துறை வங்கி மேலாளரின் அதிகார மீறலுக்கு, ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பேசாமடந்தையாகிப் போனது சாமானியனை கோபமடையச் செய்துள்ளது.

நீ இப்படித்தான் உடை உடுத்த வேண்டும், இந்த உணவு மட்டும்தான் உண்ண வேண்டும் என மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கும், வங்கி நிர்வாகத்தின் சுற்றறிக்கைக்கும் பெரிதும் வேறுபாடு கிடையாது.

இது சுதந்திரத்துக்குப்பிறகான இந்திய வங்கிகளின் நிர்வாகம் புரையோடி போயிருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இது மட்டுமல்ல பல்வேறு உயர்தர உணவக விடுதிகளில் பாரம்பரிய உடையணிந்து செல்வோருக்கு அனுமதி மறுக்கப்படுவதையும், உடையைக் காரணம் காட்டி பெண்கள் தாக்கப்படுவன போன்ற நிகழ்வுகளையும் நாம் அடிக்கடி ஊடகங்களின் வாயிலாக காணக்கூடும்.

இதுபோன்று உடையால் பாதிக்கப்பட்டோரின் ஆயிரமாயிரம் கதைகள் வெளி உலகுக்குத் தெரியாமலேயே மறைந்து போயிருக்கின்றன.

நிர்வாணமே நிரந்தரம்

கட்டுரையின் முகப்பில் ஆதாம், ஏவாள் குறித்து எழுதியிருந்தோமல்லவா? தட்பவெப்பம், வெட்கம், எதிர்பாலின கிளர்ப்பு உள்ளிட்டவை இல்லாதபட்சத்தில் மனிதனுக்கு இன்றளவுமே உடை தேவைப்பட்டிருக்காது. கடைசியாக சவக்குழியில் பிணத்துடன் கிடத்தப்படும் துணி கூட காலப்போக்கில் காணாமல் போய்விடும்.

இதற்கிடையே மதத்தின் பெயரால், உடைகளில் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கு இடமளிப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதைச்சுட்டிக்காட்டவே அது குறிப்பிடப்பட்டது.

ஆக, நிர்வாணமே நிரந்தரம் என்பதை உணருங்கள் யூனியன் வங்கி! எதற்கு உடையின் பெயரால் அதிகாரமீறல்?. நடிகர் விஜயகாந்த் பாணியில் சொல்ல வேண்டுமானால், 'செத்தா அரைஞாண் கொடிய கூட அத்துவிட்டு தான்யா புதைப்பாங்க... போங்கயா நீங்களூம் உங்க டிரெஸ் கோடும்”.

இதையும் படிங்க: 'ஒரே ஒரு ஓட்டு, பாஜகவுக்கு வேட்டு' - நெட்டிசன்கள் கிண்டல்!

Last Updated :Oct 12, 2021, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.