ETV Bharat / state

முதலமைச்சரின் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' உறுதிமொழி ஏற்பு நிகழ்வு:13,000 கிலோ கஞ்சா அழிப்பு

author img

By

Published : Aug 11, 2023, 2:59 PM IST

முதலமைச்சரின் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
முதலமைச்சரின் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், நாடு முழுவதும் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வழிமுறைகளை பின்பற்றி அழிக்கப்பட்டது.

சென்னை: போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திடவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்திடவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே காவல்துறைக்கு உத்தரவிடபட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 11) கலைவாணர் அரங்கத்தில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

மேலும், காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதில், “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்.

மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்” என உறுதிமொழி கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “அமலாக்கப் பணியகம் - குற்றப் புலணாய்வு துறை” என்ற புதிய பிரிவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர், அமலாக்கப் குற்றப்புலனாய்வு துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறும்படத்தை முதலமைச்சர் வெளியிட்டார். போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் இவ்விழிப்புணர்வு குறும்படம், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்களை எளிதாக சென்றடைய அவர்களை கவரும் வகையில் பாடல் காணொலியும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 13,000 கிலோ கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி அழிக்கப்பட்டது.

“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்கிடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சுமார் 20,000 -க்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான மாணவர் குழுக்கள் (Anti-Drug Clubs), நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் (NSS), தேசிய மாணவர் படை (NCC) மற்றும் இதர மாணவர்கள் இயக்கங்களின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தினை தொடர்ச்சியாக மேற்கொள்ள சிறப்பு தன்னார்வலர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் 22,447 குற்றவாளிகளுக்கு எதிராக 16,023 வழக்குகள் பதியப்பட்டு, 42,337 கிலோ கஞ்சா, 1.234 கிலோ ஹெராயின், 74,412 போதை மாத்திரைகள் மற்றும் 223 கிலோ பிற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போதைப் பொருள் தடுப்பு சட்டப்பிரிவு வழக்குகளில், குற்றவாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களின் பெயரிலுள்ள சொத்துக்களை கையகப்படுத்தும் தொடர் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் ரூ.18.15 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உள்துறை முதன்மைச் செயலாளர் திருமதி. பெ. அமுதா, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சந்திப் ராய் ரத்தோட், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (குற்றம்) திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மத்திய அரசு தமிழ்நாட்டை குறி வைப்பது ஏன்?-அமைச்சர் எ.வ.வேலு கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.