சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ஆசிஷ் குஹா ராய் (52). இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, அகமதாபாத் மாநகர பொருளாதார குற்ற பிரிவு போலீசால், போலி பாஸ்போர்ட், ஆவணங்கள் தயாரித்தல், மோசடி, மிரட்டுதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து இவரை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக போலீஸார் தேடி வந்தனர். ஆனால் இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் ஆசிஷ் குஹாராய், வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சிக்கிறார் என்ற தகவல் போலிஸாருக்கு கிடைத்தது. இதை அடுத்து அகமதாபாத் மாநகர போலீஸ் ஆணையர், ஆசிஷ் குஹாராயை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் எல்ஓசியும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையிலிருந்து இலங்கை செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான, பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து வந்தனர். அப்போது அங்கு இலங்கைக்கு தப்பி செல்வதற்காக, போலி பாஸ்போர்ட் வழக்கில் தேடப்பட்டு வரும் ஆசிஷ் குஹாராய் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டரில் அதிகாரிகள் பரிசோதித்த போது, இவர் இரண்டு ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.
இதை அடுத்து, ஆசிஷ் குஹாராய் பயணத்தை, குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அவரை பிடித்து ஒரு அறையில் அடைத்தனர். மேலும் இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளார் என்ற தகவலை, அகமதாபாத் மாநகர காவல் ஆணையரகத்துக்குத் தெரிவித்தனர். இதை அடுத்து அங்கிருந்து தனிப்படை போலீஸார் சென்னை விமான நிலையம் நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர்.
இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (29). இவர் மீது கடந்த ஆண்டு மே மாதம் விசாகப்பட்டினம் போலீஸால், வரதட்சணை கொடுமை, கட்டாய கருகலைப்பு, மிரட்டுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீஸார் இவரை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர் போலீஸிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இதற்கு இடையே சீனிவாஸ், வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சிக்கிறார் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர், சீனிவாசை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் எல்ஓசியும் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று சென்னையிலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சர்வதேச முனையத்திலிருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து வந்தனர். அப்போது இதே விமானத்தில் துபாய்க்கு தப்பி செல்வதற்காக வந்த சீனிவாஸ் அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களையும் குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, தலைமறைவு குற்றவாளி என்ற உண்மை தெரிய வந்தது. இதை அடுத்து அவருடைய துபாய் பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
மேலும் அவரை அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு, தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சீனிவாஸ், துபாய் தப்பி செல்ல முயன்றபோது, சென்னை விமான நிலையத்தில் சிக்கினார் என்ற தகவலையும் தெரிவித்தனர். இதை அடுத்து விசாகப்பட்டினத்திலிருந்து தனிப்படை போலீஸார், சென்னை விமான நிலையத்திற்கு நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர்.
குஜராத் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, இரு தேடப்படும் தலைமறைவு குற்றவாளிகள், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, அடுத்தடுத்து சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கி காட்டி மிரட்டல் : பாஜக பிரமுகர் சிக்கியது எப்படி? "புஷ்பா" திரைப்படம் போன்று செம்மரக்கடத்தல் சாம்ராஜ்யம்