ETV Bharat / state

வட்டாரக் கல்வி அலுவலர் பணி: விண்ணப்பங்களை திருத்திக் கொள்ள கால அவகாசம்!

author img

By

Published : Jul 11, 2023, 7:42 PM IST

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்திக் கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.

வட்டாரக் கல்வி அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பங்களை திருத்திக் கொள்ள கால அவகாச
வட்டாரக் கல்வி அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பங்களை திருத்திக் கொள்ள கால அவகாச

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், படிவங்களில் ஏதேனும் கண்டறியப்படும் திருத்தங்களை ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரையில் திருத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும், அந்தப் பணியிடத்திற்கு ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாகவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் மேலும் ஜூலை 12ஆம் தேதி வரையில் ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பிக்க கூடுதல் கால நீடிப்பு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம். வட்டாரக்கல்வி அலுவலர் பணியில் 33 இடங்கள் நிரப்பப்பட உள்ளன'' என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை நீடித்து அறிவித்துள்ளது. அதன்படி வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் அவகாசம் கேட்டுள்ளதால், ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் தற்பொழுது விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ததில், திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதன் அடிப்படையில், இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பங்களில் ஜூலை 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் திருத்தம் செய்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருத்தங்கள் செய்யும் போது வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். திருத்தங்களை செய்து புதுப்பித்த உடன் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரையில் உள்ள சமர்ப்பி, பட்டனை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் மாற்றங்களை செய்து சமர்பித்த பின்னர் மீண்டும் மாற்றங்கள் ஏதும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதியப்பட்ட விண்ணப்பத்தில் மாற்றம் செய்யாவிட்டால், முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றம் செய்ய இயலாது. இனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தங்கள் இருக்கும்பட்சத்தில் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத்தொகையில் ஏற்படும் மாற்றங்களில் விண்ணப்பதாரரே பொறுப்பாவார் என விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விண்ணப்பக்கட்டணத் தொகையில் ஏதேனும் திருத்தம் இருந்தால், தேர்வுக்கான முழுக்கட்டணத்தொகையை மீண்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் செலுத்திய கட்டணத்தில் முன்னதாக மீதம் இருந்து திரும்ப செலுத்த வேண்டியதிருந்தால், விண்ணப்பதாரரின் கட்டணத்தின் மீதித் தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது என்றும்; இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எந்தவித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதீத செலவில் நடக்கும் பொதுக்கூட்டங்களால் என்ன பயன்? தேர்தலில் புழங்கும் பணம்: இது தான் உண்மையான ஜனநாயகமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.