ETV Bharat / state

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா?

author img

By

Published : Jul 25, 2023, 2:19 PM IST

again increase tomato price
மீண்டும் தக்காளி விலை உயர்வு

தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் இன்று (ஜூலை 25) மீண்டும் சதமடித்த தக்காளி ரூ.110 - ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் காய்கறிகள் தினமும் விற்பனைக்காக வருகின்றன. இதில் முக்கியமாக கருதப்படுவது அடிப்படை காய்கறியான வெங்காயம், தக்காளி தான்.

கடந்த சில மாதமாகவே தக்காளியின் விலை தங்கத்தின் விலை போல் தினமும் மக்களால் பார்க்கப்படும் பொருளாய் இருந்து வருகிறது. தங்கத்தை போலவே தக்காளியின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தற்போது கோயம்பேடு சந்தையில் ஜூன் மாதத்தில் மொத்த விலையில் கிலோ ரூ.50க்கும், சில்லறை விற்பனையில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இம்மாதத்தின் தொடக்கத்தில் புதிய உச்சமாக ரூ.100 ஆக உயர்ந்தது. அந்த திடீர் ஏற்றம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இது மட்டுமின்றி தக்காளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு சில்லறை விற்பனையில் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இந்த நிலையில் தக்காளி சிறிது கருணை காட்டியதால் கடந்த இரண்டு நாட்கள் தக்காளி விலை சற்று குறைந்து ரூ.90 - ரூ.100 வரை விற்கப்பட்டது.

ஆனால் மீண்டும் தக்காளி இன்று மொத்த விலையில் ரூ.110க்கும் சில்லறை விற்பனையில் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோயம்பேடு காய்கனி மொத்த வியாபர சங்கத்தின் பொருளாளர் சுகுமார் கூறியது, "தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும்போது கோயம்பேடு சந்தைக்கு 60 முதல் 80 வண்டிகளில் 800 டன் முதல் 1000 டன் வரை தக்காளி விற்பனைக்கு வரும்.

ஆனால், தற்போது விளைச்சல் குறைவு என்பதால் வண்டிகள் மொத்தமாகவே 300 டன்னில் இருந்து 450 டன் வரை மட்டும் தான் வருகின்றன. இதனால் தக்காளின் விலை அதிகரித்தது. அதேபோல் இன்று காலை வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சற்று குறைந்துள்ளது. நாட்டு தக்காளி மற்றும் நவீன் தக்காளி ஆகிய ரக தக்காளி வரத்து குறைந்து இன்று (ஜூலை 25) 33 லாரிகள் மட்டுமே வந்தது.

இதனால் தக்காளி விலை கடந்த 2 நாட்களை விட இன்று விலை அதிகமாகியுள்ளது. மேலும், சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதாவது, பீன்ஸ் ரூ.80க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.120, அவரைக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தக்காளி வியாபாரிகள் கூறியதாவது, "கால நிலை மாற்றம், மழை தவறுதல், அதிக வெப்பம் ஆகியவை காரணமாக விளைச்சல் குறைந்து தக்காளி விலை உயர்ந்துள்ளது. எப்போதும் ஆனி - ஆடி மாதங்களில் தக்காளி சிறிது அளவு விலை உயரும். ஆனால் தினம் தினம் விலையில் ஏற்ற இறக்கம் இருப்பது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஒரே முதுமக்கள் தாழியில் 2 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.