ETV Bharat / state

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள் இதுதான் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

author img

By

Published : Jan 6, 2023, 3:54 PM IST

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!
தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள், உச்ச நீதிமன்ற ஆணைகள் மற்றும் மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியே வகுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை: இதுகுறித்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் உச்ச நீதிமன்ற ஆணைகள் மற்றும் மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில், சிலர் இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்.

ஆனால், 1959ஆம் ஆண்டு முதல் 2021, நவ.3க்கு முன்பு வரை, காப்புக்காடுகளின் எல்லைகளிலிருந்து 60 மீட்டர் சுற்றளவிற்குள் எந்தவித குவாரிப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன், காப்புக்காடுகளின் அருகிலுள்ள பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் குத்தகை உரிமம் வழங்கப்பட்டு வந்தது.

மேலும் குவாரிப் பணிகளை மேற்கொள்ளும்போது, வரலாற்றுச் சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுக்கை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 03.11.2021 நாளிட்ட அரசாணையின்படி, 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில், விதி 36 (1ஏ)இல் உபவிதி (டி) மற்றும் (இ) சேர்க்கப்பட்டது.

இந்த விதி சேர்க்கப்பட்டதன் காரணமாக காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிகளின் எல்லையிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள குவாரிகள், சுரங்கங்கள் மற்றும் கல் அரவை ஆலைகளில் பணிகள் பாதிக்கப்படுவதாக குவாரி உரிமையாளர்கள் பலமுறை நேரில் சந்தித்து முறையிட்டு வந்தார்கள்.

எனவே, தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு (TAMIN) குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ள 19 குவாரிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் தமிழ்நாட்டில் காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிகளின் எல்லைகளிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் ஏற்கனவே 2021 நவம்பர் வரை இயங்கி வந்தன.

மேலும் 2021 நவம்பர் மாதத்தில் இயற்றப்பட்ட புதிய விதியின் காரணமாக, மேற்கண்ட குவாரிகளில் குவாரிப் பணிகள் பாதிப்படைந்ததோடு, பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்து பாதிப்புக்குள்ளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 2022, ஏப்.19 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் 36 (1-ஏ) (இ) என்ற புதிய விதிகள் புகுத்தப்பட்டதன் காரணமாக, தேசியப் பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக் காடுகள் போன்ற பகுதிகளிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் குவாரி மற்றும் சுரங்கங்கள் செயல்படவில்லை.

குறிப்பாக காப்புக் காடுகளிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் குவாரி மற்றும் சுரங்கங்கள் செயல்பட விதிக்கப்பட்டுள்ள தடையால், டாமின் நிறுவனத்தின் 19 குவாரிகள் உள்பட பெருமளவிலான குவாரி மற்றும் சுரங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆதலால், பாதிக்கப்பட்டுள்ள குவாரி மற்றும் சுரங்க உரிமையாளர்களின், தொழிலாளர்களின் நலனைக் காத்திட மற்றும் அரசின் வருவாயைப் பெருக்கிட ஏதுவாக இவ்விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தேன்.

பின்னர், 2022 ஜூன் 16 அன்று நடைபெற்ற மாவட்ட கனிம அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும், காப்புக் காடுகள் அமைந்துள்ள பகுதிகளின் எல்லைகளிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுரங்க மற்றும் குவாரிகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பது மற்றும் அரசின் வருவாயினை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஏதுவாக, கனிமவளத்துறை ஆணையரால், அரசுக்கு உரிய முன்மொழிவுகள் 2022 ஜூன் 23 அன்று அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட குவாரிகள் மற்றும் சுரங்கங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும், குத்தகைதாரர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திடவும், அரசின் வருவாயைப் பெருக்கிடவும் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் காரணமாக, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் 2022, டிச.14 அன்று உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விதி 36 (1ஏ) (இ)இன்படி, சூழலியல் உணர்திறன் பகுதி, சுற்றுப்புறம் மற்றும் சூழலியல் பாதுகாப்பு பகுதிகளான தேசிய பூங்காக்கள், வன உயிர் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானைகள் வழித்தடங்கள் ஆகியவற்றின் எல்லைகளிலிருந்து, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகத்தால் அவ்வப்போது அறிவிக்கப்படும் பாதுகாப்பு தூரம் அல்லது அப்பகுதிகளின் எல்லைகளிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவு, இவற்றுள் எது அதிகமோ, அப்பகுதிகளுக்குள் எந்தவித குவாரிப் பணிகளும், சுரங்கப் பணிகளும் அல்லது கல் அரவைப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது.

விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தத்தின்படி, தேசியப் பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம் மற்றும் யானை வழித்தடங்கள் ஆகியவற்றிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் குவாரிப் பணிகளுக்கான தடை தற்போதும் நீடிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனவே, 14.12.2022 நாளிட்ட விதித்திருத்தத்தின் மூலம், காப்புக்காடுகளுக்கு அருகிலுள்ள பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் புதியதாகக் கனிமம் வெட்டியெடுப்பதற்காக குவாரி மற்றும் சுரங்கக் குத்தகை உரிமம் வழங்கும்போது, காப்புக்காடுகளின் எல்லைகளில் இருந்து 60 மீட்டர் சுற்றளவிற்குள் எந்தவித குவாரிப்பணி அல்லது சுரங்கப்பணி மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் சுரங்கம் அல்லது குவாரி குத்தகை உரிமம் தொடர்ந்து வழங்கப்படும்.

ஏற்கனவே இயங்கி வந்த குவாரிகள் செயல்படலாம். மேலும், மேற்படி விதித்திருத்தத்தின் மூலம் காப்புக்காடுகளின் எல்லைகளில் இருந்து 60 மீட்டர் சுற்றளவிற்கு வெளியே அமைந்துள்ள பட்டா நிலங்களில் கல் அரவை இயந்திரங்கள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959இல் அரசு ஆணை நாள் 14.12.2022இன் வாயிலாக காப்புக் காடுகள் என்ற சொல் நீக்கப்பட்டது சரியே. 1959ஆம் ஆண்டு முதல் 03.11.2021 நாளிட்ட விதிதிருத்தத்திற்கு முன்பு இருந்த காப்பு காடுகளுக்கான பாதுகாப்பு இடைவெளியே தற்போதும் பின்பற்றப்படுகின்றது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காப்பு காடுகளை ஒட்டிய குவாரி, சுரங்க பணிகளுக்காண தடை நீக்கம்; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.