ETV Bharat / state

மருத்துவமனைகளில் டாக்டர்களை நியமிக்க தொடர்ந்து நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 5:07 PM IST

Updated : Sep 3, 2023, 5:36 PM IST

tn health minister ma subramanian said steps will be taken to fill the vacant posts in the medical field
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma subramanian: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் காலிப் பணியிடம் இருந்தால் அதனை நிரப்புவதற்குத் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 139, 140, 142 ஆவது வார்டுகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு காப்பீட்டு அட்டையை அவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 1.43 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யுனைடெட் இந்தியா நிறுவனத்திற்கு காப்பீட்டு பிரியமாக 2022 ஜனவரி 11ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.7ஆயிரத்து730 கோடி செலவுக்கான இந்த திட்டத்தை, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டார்கள். இதற்கான ஆண்டு ஒன்றுக்கான பிரீமியத் தொகை ரூ.1,546 கோடி.

இதில் அரசு மருத்துவமனைகள் 853, தனியார் மருத்துவமனைகள் 969 ஆக மொத்தம் 1,822 மருத்துவமனைகள் இக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றன. இக்காப்பீட்டுத் திட்டத்தில் 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளும், 8 சிறப்பு அறுவை சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும், 11 தொடர் சிகிச்சை முறைகளும் உள்ளன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 2023 செப்டம்பர் மாதம் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உள்ள 1.43 கோடி குடும்பங்களுக்குள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் சமூக, பொருளாதார சாதி வாரியாக 86 லட்சத்து 48 ஆயிரத்து 748 குடும்பங்கள் கண்டறியப்பட்டு இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளனர்.

இத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு 60 விழுக்காடும், மாநில அரசின் பங்கு 40 விழுக்காடு ஆகும். முதமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் ஒரு கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 392 பயனாளிகள் ரூ.12ஆயிரத்து 91 கோடி காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா காப்பீடு திட்ட பயனாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுவதுடன், பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா காப்பீடு திட்ட அட்டை பெற்றுள்ள பிற மாநிலத்தவர்களுக்கும் சிகிச்சை வழங்க உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

18.9.2018 முதல் 28.8.2023 வரையிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் தொடங்கப்பட்டத்திலிருந்து மொத்த பயனாளிகள் (1.43 கோடி குடும்பங்களில்) 31,27,029 பேர் ரூ.4,780 கோடி காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர். இதில் ஒருங்கிணைந்த பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா காப்பீட்டு கீழ் 86 லட்சத்து 48 ஆயிரத்து 748 குடும்பங்களில் 16,75,403 பயனாளிகள் ரூ.2,574 கோடி காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.699 ஆக இருந்தது. இந்த ஆட்சியில் ரூ.849 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் காப்புறுதித் தொகை ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.2 லட்சமாக இருந்தது, தற்போதைய ஆட்சியில் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் சிகிச்சை முறைகள் 1450 ஆக இருந்தது, தற்போதைய ஆட்சியில் 1513 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை 970, தற்போதைய ஆட்சியில் 1829 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் பிரத்யேக சிகிச்சை முறைகளின் எண்ணிக்கை 2, தற்போதைய ஆட்சிக் காலத்தில் 8 ஆக உயர்ந்துள்ளது அந்த வகையில் காப்பீட்டு திட்டம் என்பது பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கின்றது. அதேபோல் இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டம் 2021 டிசம்பர் மாதம் 18ஆம் தேதி முதலமைச்சரால் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரியில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக அவர்களை காக்கும் பொருட்டு, முதல் 48 மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் தரும் வகையில் அந்தத் திட்டம் அப்போது தொடங்கி வைக்கப்பட்டது.

அத்திட்டத்தின் மூலம் இதுவரை பயன்பெற்றுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை 1,81,860 பேர், இதன் மூலம் அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் செலவழிக்கப்பட்டுள்ள தொகை ரூ.159.48 கோடி ஆகும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் விடுபட்டு போகக்கூடாது என்கின்ற வகையில் இந்த சிறப்பு முகங்கள் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் புதிதாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் முதல் கட்டமாக 500 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டன. மேலும் 208 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட வேண்டியுள்ளது. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மாவட்ட சுகாதார மையத்தின் மூலம் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவற்றில் மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது குறித்து விசாரித்து அறிக்கை பெறப்படும். தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை இருக்காது.

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர் தேர்வுச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர்களுக்கான 21 பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூடுதல் சிறப்பு மதிப்பெண் தர முதலமைச்சர் ஆலோசனை பெற்று, அவ்வாறு அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி அவர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றிக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை தொடர்ந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘இந்திய மாநிலங்களின் மீதான தாக்குதல்’ - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!

Last Updated :Sep 3, 2023, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.