ETV Bharat / state

'18 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Apr 24, 2022, 5:32 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

18 வயது மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 60 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 24) அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மூன்று அலைகளும் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ஒரு வார காலத்தில் தொற்றுப்பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: சென்னை ஐஐடியில் இதுவரையில் 2ஆயிரத்து 15 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 60 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்தவர்களில் 2.98 விழுக்காடாக தொற்று எண்ணிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக கரோனா இறப்பு பதிவாகவில்லை. மேலும் 100க்கும் கீழ் பாதிப்பு உள்ளது.

சென்னை ஐஐடியில் அமைச்சர், செயலாளர்
சென்னை ஐஐடியில் அமைச்சர், செயலாளர்

சென்னை ஐஐடியில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நேற்று வரை கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சென்னை ஐஐடிக்கு வந்து கல்வி பயின்று வருகிறார்கள். 14 விடுதிகளில் எந்த விடுதியில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட 60 பேரில் கடந்த 4 நாட்களில் 40 பேருக்குத் தொற்று இல்லாத நிலை உள்ளது. தற்போது 20 பேருக்கு லேசான பாதிப்பு உள்ளது.

சென்னை ஐஐடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டப்பட உள்ளது. மே 8ஆம் தேதி தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முதல் தவணை செலுத்தாக 40 லட்சம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத 1.40 லட்சம் பேருக்கும் என 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் அமைச்சர், செயலாளர்
சென்னை ஐஐடியில் அமைச்சர், செயலாளர்

முதலமைச்சர் நாளை ஆலோசனை: கடந்த ஒரு வாரமாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 4ஆம் அலை இன்னும் தொடங்கவில்லை. மக்கள் அச்சப்படத் தேவை இல்லை" என்றார்.

மேலும், "கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை(ஏப்ரல் 25) காலை 9 மணி அளவில் முதலமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஐஐடி வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்கின்றனர். ஐஐடி வளாகத்தில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

ஐஐடியில் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி வரும் நிலையில், தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் உணவை பேக் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஐஐடியில் உள்ளவர்களை முன்மாதிரியாக கொண்டு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தவர்களிடமிருந்து 114 கோடி ரூபாய் தற்போது வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இன்டோமெத்தசின் மருந்து: தொடர்ந்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளார் ராதாகிருஷ்ணன், "கரோனா நோய்த்தொற்று காலத்தில் பல்வேறுவகையில் ஐஐடி பணியாற்றி வருகிறது. சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இன்டோமெத்தசின் மாத்திரையை கரோனா நோயாளிகளுக்கு அளிக்கும்போது நல்ல பலன் அளிக்கிறது என கூறுகின்றனர். அரசைப் பொறுத்தவரை வல்லுநர்களின் கருத்தின் அடிப்படையில் சிகிச்சை முறைகளை வழங்கி வருகிறோம்.

இன்டோமெத்தசின் அனுமதிக்கப்பட்ட மருந்துதான். இது குறித்து மத்திய அரசிற்கும் தெரிவிப்போம். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைக்கும்போது இடங்களை நிரப்புவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - சுகாதாரத் துறை கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.