சென்னை: தமிழ்நாடு அரசின்கீழ் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ/ மாணவியருக்கு, கல்லூரி/ஐடிஐ விடுதிகள் மற்றும் பள்ளி விடுதிகள் என தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் (9.07.2021 அன்று) நடைபெற்ற இத்துறையின் ஆய்வுக் கூட்டத்தில் விடுதி மாணவ/மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் புதிதாக உணவுப்பட்டியல் தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் கருத்துருவில், கல்லூரி/பள்ளி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ/ மாணவியருக்கு Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition நிறுவனத்தினர் உணவுப்பட்டியலை பரிந்துரைத்துள்ளனர்.
அந்தப் பட்டியலின் அடிப்படையில், காலை, மதியம், இரவு, சிறப்பு உணவு மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி மாதாந்திர உணவுக் கட்டணத்தில் மாற்றம் இல்லாமல், உணவு வகைகளுக்கான பட்டியலில் மாற்றம் செய்யலாம் எனப் பரிந்துரைத்துள்ளர். இதனையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு கவனமுடன் ஆய்வு செய்து புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
இத்துறையின் மூலம் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலப்பள்ளி/கல்லூரி விடுதி மாணவ/ மாணவியருக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உணவுக்கட்டணத்தில் மாற்றம் இல்லாமல், உணவு வகைகளுக்கான பட்டியல் மாற்றியமைக்கப்பட்டும், தோசைக்கல் மற்றும் இடியாப்ப அச்சு இயந்திரம் ஆகியவை விடுதிகளுக்கு வழங்கப்படும் என்றும், அதனை அவசர பராமரிப்புப் பணிகளுக்கான செலவினத் தொகையில் வாங்குவதற்கும் அனுமதி வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி உணவு வகைகளை மாற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், இப்போது வாரம் ஒருநாள், முதல் மற்றும் 3வது வாரம் ஆட்டிறைச்சி 80 கிராம், 2 மற்றும் 4ஆவது வாரம் கோழி இறைச்சி, 100 கிராம் வீதமும் கணக்கிட்டு வழங்கப்படுவதோடு, மாணவருக்கு, மாதம் 20 நாட்கள் முட்டையும் வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாதவருக்கு, வாழைப்பழம் வழங்கப்படுகிறது.
அதேபோல், மாலை நேர சிற்றுண்டியாக வேகவைத்த பயிறு வகைகள், சுக்குமல்லி அல்லது கருப்பட்டி காபி வழங்கப்படுகிறது. தோசை மற்றும் இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சேமியா, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் போன்ற உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், இத்துடன், சாம்பார், சட்னியுடன் தோசை அல்லது நவதானிய தோசை, பட்டாணி குருமா அல்லது தேங்காய்ப் பாலுடன் இடியாப்பம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசாணை ஜூன் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 3) அன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.