ETV Bharat / state

காப்புக்காடுகளை சுற்றி குவாரிகளுக்கு அனுமதி ஏன்? அரசு விளக்கம்

author img

By

Published : Dec 24, 2022, 7:40 PM IST

Etv Bharat
Etv Bharat

காப்புக் காடுகளைச் சுற்றி குவாரிகளுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசு இன்று (டிச.24) வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தொழில் துறையின் 2021-22-ம் ஆண்டைய மானியக் கோரிக்கையை முன் வைத்து பேசும் போது நீர்வளத்துறை அமைச்சர் "குவாரிப்பணிகளில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை தொடர்பான திட்டங்களை முதலமைச்சர் ஆய்வு செய்தபோதும், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள், மற்றும் குவாரிப் பகுதிகளிலுள்ள குடியிருப்புகள், மற்றும் பிறவற்றை பாதுகாக்கும் பொருட்டு தற்போதுள்ள விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தூரத்தை நீட்டித்து 1959-ம் ஆண்டைய தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிககளில் திருத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, தொழில் துறையில் 03.11.2021 நாளிட்ட அ.ஆ(நிலை) எண் 295-ல் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள்-1959-ல், விதி 36(1-A)-ன் கீழ் புதிய துணை விதி (e) இணைக்கப்பட்டு தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக்காடுகள் (Reserve Forest) போன்ற பகுதிகளிலிருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் குவாரி மற்றும் சுரங்கங்கள் செயல்பட தடுக்கப்பட்டது. "காப்புக்காடுகள்" எனும் தொடர் குறிப்பாக அறிவிக்கப்படாத நிலையில் மேற்காணும் துணைவிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தடையின் காரணமாக பெரும் சிரமத்திற்கு உள்ளான மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைஞர்கள், மட்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் சிற்பிகள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து, 2022-23-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, 19.04.2022 அன்று நீர்வளத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றும் போது, மேற்குறிப்பிட்ட விதியின் காரணமாக காப்புக்காடுகளிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் அநேக நடைமுறை சிக்கல்கள் உருவாகின என்றும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் TAMIN நிறுவனத்தின் பெருமளவிலான குவாரி மற்றும் சுரங்கங்கள் 19 குவாரிகள் உட்பட பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாக அரசிற்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே பாதிக்கப்பட்டுள்ள குவாரி மற்றும் சுரங்க உரிமையாளர்களின் நலனை காத்திட மற்றும் அரசின் வருவாயை பெருக்கிட ஏதுவாக இவ்விதியில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் இப்பொருண்மை 16.06.2022 அன்று நீர்வளத்துறை அமைச்சர் நடத்திய புவியியல் மற்றும் சுரங்கத் துறை மாவட்டஅலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இவ்வரசால் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆனணயரின் இப்பொருண்மை குறித்த பரிந்துரையை மிகவும் கவனத்துடன் பரிசீலணை செய்யப்பட்டு, 14.12.2022 நாளிட்ட தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு (ம) வர்த்தகத் துறையின் அரசாணை (நிலை) எண் 243-ல் மேற்குறிப்பிட்ட விதி 36(1-A) (e)-ல் கண்டுள்ள 'காப்புக்காடுகள்' என்ற தொடர் நீக்கம் செய்யப்பட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின்படி, தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம் மற்றும் யானை வழித்தடங்கள் ஆகியவற்றிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் குவாரி பணிகளுக்கான தடை தற்போதும் நீடிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது, இந்திய ஒன்றியம் மற்றும் பலருக்கு எதிராக காடவர்மன் திருமால்பட் என்பவரால் தொடுக்கப்பட்ட W.P. (C) No.202 of 1995 மீது மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் 03.06.2022 நாளிட்ட ஆணைக்கு ஏற்ப அமைந்துள்ளது.

இவ்வாணையில், பிற ஆணைகளுக்கிடையே, ஒவ்வொரு பாதுகாக்கப்பட்ட காடுகள் அதாவது தேசிய பூங்கா அல்லது வனவிலங்கு சரணாலயம் போன்றவை வரையறுக்கப்பட்ட எல்லையிலிருந்து குறைந்தபட்சம் 1 கி.மீ.சுற்றளவிற்கு சுற்றுச் சூழல் உணர்திறன் மண்டலமாக கொண்டிருக்க வேண்டும். இத்தகைய பாதுகாக்கப்பட்ட காடுகளில் 09.02.2011 நாளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தடை செய்யப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளை அதாவது தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் சுரங்கப் பணிகளுக்கு அனுமதியளித்தல் கூடாது போன்றவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், "பாதுகாக்கப்பட்ட காடுகள்" என்பதன் பொருள் சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் எனவும், அவை 'காப்புக்காடுகள்" அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 09.02.2011 நாளிட்ட இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையின் வன விலங்கு பிரிவின் வழிகாட்டி நெறிமுறைகள், தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களுக்கு தொடர்புடையதாக உள்ளவையே தவிர "காப்புக்காடுகள்" பற்றியவை அல்ல' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக Vs திமுக.. தூத்துக்குடியில் நடக்கும் மல்லுக்கட்டு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.