ETV Bharat / state

“நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவிற்கு அஞ்சலி நாள்” - முதலமைச்சர் ஸ்டாலின்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 1:00 PM IST

CM Stalin speech at anita achievers academy
"நீட் தேர்வுக்கு முற்றுபுள்ளி வைக்கும் நாளே அனிதாவிற்கு அஞ்சலி நாள்” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

CM Stalin at anita achievers academy: நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் சமீபத்தில் மறைவெய்திய ஜெகதீஸ்வரன் வரைக்கும் மாணவச் செல்வங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

சென்னை: அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பாக, மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கொளத்தூர் வீனஸ் எவர்வின் பள்ளி மைதானத்தில் நேற்று (செப் 12) நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த தொகுதி இந்த கொளத்தூர் தொகுதி என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். இந்த கொளத்தூர் தொகுதிக்கு எத்தனை முறை வந்தாலும் எனக்கு திகட்டாது. வந்துகொண்டே இருக்கவேண்டும் போலத்தான் எனக்கு தோன்றிக்கொண்டே இருக்கும்.

அதுவும் குறிப்பாக, இந்த தொகுதிக்கு வரக்கூடிய நேரத்தில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால், அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாக்க, நம்முடைய மாணவச் செல்வங்களுக்கு உதவுகின்ற அந்த வாய்ப்பு கிடைக்கின்ற போது அது இன்னும் கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்பட்டதின் நோக்கத்தை எப்போதெல்லாம் உங்களை சந்திக்க வருகிறேனோ, எப்போதெல்லாம் இந்த அகாடமியினுடைய சார்பில் நடக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும்பொழுது அப்போதெல்லாம் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி: நான் எத்தனையோ முறை அதை சுட்டிக்காட்டி பேசி இருக்கிறேன். நம்முடைய கொளத்தூர் தொகுதியில் இருக்கின்ற இளைஞர்களும், மாணவர்களும் தங்களுடைய திறன்களை மேலும் வளப்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றிடவேண்டும் என்கின்ற அந்த நோக்கத்தோடுதான் இந்த அகாடமியை, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்கிற பெயரில், நாம் தொடங்கினோம்.

நீட் என்ற கொடுமையான தேர்வுக்கு என்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ, அன்றைக்குதான் நாம் அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தக்கூடிய நாளாக அது அமைந்திடமுடியும். நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் சமீபத்தில் மறைவெய்திய ஜெகதீஸ்வரன் வரைக்கும் அந்த மாணவச் செல்வங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

நம்முடைய அனிதா பெயரில் அச்சீவர்ஸ் அகாடமி தொடங்குவதிலிருந்து, டேலி படிப்பைப் பொறுத்தவரையில், இதுவரை 9 குழு முடிவடைந்து, 743 மாணவிகள் இலவச லேப்டாப் மற்றும் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். ஆண்களில், இதுவரை 5 குழு முடித்து, 381 மாணவர்கள் இலவச லேப்டாப் மற்றும் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு, மேலும் 136 மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட இருக்கிறது.

தையல் பயிற்சியை பொறுத்தவரை, இதுவரை 5 குழுவில் 1,467 பெண்கள் இலவச பயிற்சி முடித்து, சான்றிதழ் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கு 6 ஆவது குழுவில் 359 பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட இருக்கிறது. தற்போது, 491 மாணவ மாணவிகள் டேலி மற்றும் தையல் பயிற்சியை பெற்று வருகிறார்கள்.

இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு வருகிறது. பட்டப்படிப்புடன் சேர்ந்து இதுபோன்ற தனித்திறமைகள் இருந்தால்தான் வளர முடியும். அந்த வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில், அறிவாற்றலில் சிறந்தவர்களாகவும், தனித்திறமை கொண்டவர்களாகவும் வளரவேண்டும். அதற்காகத்தான் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன். இது என்னுடைய கனவுத் திட்டம்.

ஆண்டுக்கு, பத்து லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டோம். ஆனால் கடந்த ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் இதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய பெண்களின் மாதாந்திரச் செலவில் குறிப்பிட்ட தொகையை மிச்சப்படுத்தி வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி வரும் விடியல் பயணத்திட்டம், பெண்கள் உயர்கல்விக்கு செல்வதை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டம் தொடங்கியுள்ளோம்.

பள்ளிகளுக்கு வரக்கூடிய குழந்தைச் செல்வங்கள் பட்டினியுடன் வரும் இந்த செல்வங்களுடைய பசியை ஆற்றி வரக்கூடிய காலை உணவுத்திட்டம், ஏழை, எளிய குடும்பத் தலைவிகளின் பொருளாதாரத் தற்சார்பை உறுதிப்படுத்தக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இன்னும் மூன்று நாட்களுக்குள் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.

கலைஞர் பெயரால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நாம் தொடங்கப் போகின்றோம். இன்னும் சொல்லப்போனால், இந்தத் திட்டத்தின் மூலமாக உதவித்தொகை கொடுக்கவில்லை; உரிமையை கொடுக்கின்றோம். அதுதான் முக்கியம். இந்த மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடிக் குடும்பங்கள்! இன்னும் பல தலைமுறைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்

இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் பவரை பறித்த ஆட்சியர்.. தென்காசியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.