ETV Bharat / state

காலமான மகாகவி பாரதியின் பேத்தி: முதலமைச்சர் இரங்கல்!

author img

By

Published : Dec 26, 2022, 7:28 PM IST

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்‌ பேத்தியான லலிதா பாரதி காலமானார். அவருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாகவியின் பேத்தி காலமானார்
மகாகவியின் பேத்தி காலமானார்

சென்னை: மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி (94), வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணியளவில் காலமானார். இவரது மறைவிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்‌ செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “சிறந்த கவிஞரும்‌ இசையாசிரியரும்‌ மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்‌ மகள் வயிற்றுப்‌ பேத்தியான லலிதா பாரதி (94) வயது முதிர்வின்‌ காரணமாக இயற்கை எய்தினார்‌ என்றறிந்து மிகவும்‌ வருந்துகிறேன்‌.

மகாகவி பாரதியாரின்‌ மூத்த மகள்‌ தங்கம்மாளின்‌ மகளான லலிதா பாரதி அவர்கள்‌ 40 ஆண்டுகளாக இசையாசிரியராகப்‌ பணியாற்றியவர்‌ என்பதோடு, பாரதியாரின்‌ பாடல்களை இசைவடிவில்‌ பரப்பும்‌ தமிழ்ப்பணியிலும்‌ ஈடுபட்டிருந்தார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

தலைசிறந்த தமிழ்க்குடும்பத்தின்‌ மூத்த உறுப்பினர்களுள்‌ ஒருவரான லலிதா பாரதி மறைவால்‌ வாடும்‌ அவர்தம்‌ உறவினர்கள்‌, தமிழார்வலர்கள்‌ உள்ளிட்டோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌ ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மகாகவி பாரதியார் போன்று இவரும் தமிழில் மிகவும் புலமை பெற்றவர். கவிதை எழுதுவதில் சிறந்தவரான இவர் பல நூல்கள் எழுதி பாரதியின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தவர். இவர் தன் கையால், கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கி கவுரவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுனாமி நினைவு தினம்: குமரி கடற்கரையில் கண்ணீர் மல்க மீனவர்கள் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.