ETV Bharat / state

மணிப்பூர் வன்முறை:முதலமைச்சர் ஸ்டாலின் மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம்; என்ன இருந்தது அந்த கடிதத்தில்!

author img

By

Published : Aug 1, 2023, 2:19 PM IST

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் மாநில முதலமைச்சர் என்.பைரேன் சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம்
முதலமைச்சர் ஸ்டாலின் மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம்

சென்னை: மணிப்பூரில் உள்ள மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக இருவேறு சமூகத்தினரிடையே வன்முறை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிகழ்ந்து வருகிறது. அந்த விவகாரத்தில் குக்கி என்ற மலை கிராம மக்களை தாக்குவது, தீயிட்டு எரிப்பது போன்ற வன்முறை அறங்கேறியது. அது மட்டுமின்றி பெண்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி, அதை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் மாநில முதலமைச்சர் என்.பைரேன் சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று (31.7.2023) கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டு உள்ளார். தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் தனது கவனத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

இதையும் படிங்க: அம்பேத்கரும் - காந்தியும்.. நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க கூடாதா? - சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?

மேலும் இந்த இக்கட்டான நேரத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசு வலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இந்த பொருட்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும், மேலும், இது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தவும் கோரியுள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Manipur violence: "மனித உரிமை அமைப்புகள் செயலிழந்து விட்டன" - கொந்தளித்த ஹென்றி டிபேன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.