ETV Bharat / state

தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Feb 14, 2023, 3:11 PM IST

தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.2.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023–யை வெளியிட்டார். இந்த கொள்கை, வெளியிடப்பட்ட தினத்திலிருந்து ஐந்து வருடங்கள் நடைமுறையில் இருக்கும்.

தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையின் அவசியம்: மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையை தக்க வைத்து, மேம்படுத்திடவும், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கேற்ப மின்வாகன உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை திறமையுடன் எதிர்கொள்ளும் வகையிலும், ஒரு மாறுபட்ட கொள்கை அணுகுமுறையும், தற்போதைய கொள்கையில் சில மாற்றங்களும் தேவைப்படுகிறது.

ஆகவே, மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை வெகுவாக அதிகரித்திடும் நோக்கத்திலும், விநியோகம், தேவைகள் / பயன்பாடுகள் மற்றும் சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்திடும் வகையிலும் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 என்ற திருத்திய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொள்கையின் இலக்கு: மின்வாகன உற்பத்தித்துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த தமிழ்நாடு மின் வாகன கொள்கை 2023-யின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையின் சிறப்பம்சங்கள்: பொது போக்குவரத்து திட்டங்களை மின்மயமாக்குதல் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி திட்டங்களை ஊக்குவித்தல் போன்ற காரணங்களுக்காக பிரத்தியேகமாக மின் வாகன நகரங்கள் உருவாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரி திரும்ப வழங்குதல், மூலதன மானியம், விற்று முதல் அடிப்படையிலான மானியம், சிறப்பு மேம்பட்ட மின்கல வேதியியல் சலுகை என பல்வேறு வகைப்பட்ட முதலீட்டு சலுகைகளில் ஏதேனும் ஒன்று மற்றும் பிற சலுகைகளும் பெற வாய்ப்புகள் அதிகம்.

சிறப்பு ஊக்கச் சலுகைகள்: மின்னேற்ற நிலையங்களுக்கான ஊக்க சலுகைகள், பொது மின்கல மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்கள் 31.12.2025 வரை நீட்டிப்பு செய்தல், மின் ஆட்டோகளுக்கான பதிவு மேற்கொள்ளுதலில் இருந்து விலக்கு அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் E-2W மற்றும் E-4W வாகனங்களுக்கு வர்த்தக அனுமதிப் பத்திரங்களை வழங்குதல், மின் வாகன மின்னேற்றுதலுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கான மூலதன மானியம் வழங்குதல்.

திறன் மேம்பாடு, புதிய கட்டடங்கள், ஏற்கனவே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு நகரியங்கள் ஆகியவற்றுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட மின்சார வாகன மின்னேற்று உள்கட்டமைப்புக்கான மாதிரி கட்டட விதிகள் (Model Building Bye-laws - MBBL) 2016-க்கு ஏற்ப தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளுதல்.

மின் வாகனச் சூழலமைப்பினை மேம்படுத்தும் வகையில், மின் வாகன தொழிற் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் விற்பனையாளர் சூழலமைப்பு உருவாக்குதல், பிரத்யேகமாக மின்வாகன இணையதளம் உருவாக்குதல் மற்றும் வழிகாட்டி நிறுவனத்தில் மின்வாகன ஆதரவுச் சேவை பிரிவு உருவாக்குதல், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில், முக்கியத் துறைகளின் செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மின் வாகன வழிகாட்டுதல் குழுவை மாற்றி அமைத்து, இக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. வே. விஷ்ணு, ஹுண்டாய், டி.ஐ க்ளீன் மொபிலிடி, ராயல் என்பீல்ட், ஓலா எலெக்ட்ரிக், ஸியோன் சார்ஜிங், எச்.எல் மேண்டோ, ஏதெர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள்/தலைமைச் செயல் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அரசு அதிகாரிகள் செயல் வீரர்களாக செயல்பட வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.