ETV Bharat / state

முதலமைச்சரின் சுதந்திர தின விருதுகள் - காவல் அதிகாரிகள் 6 பேருக்கு அறிவிப்பு!

author img

By

Published : Aug 14, 2023, 12:15 PM IST

முதலமைச்சரின் சுதந்திர தின விருது
முதலமைச்சரின் சுதந்திர தின விருது

சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆறு காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சுதந்திர தின விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் சுதந்திர தின முன்னேற்பாடாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேருரையாற்ற உள்ளார்.

இதனால், புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கூடுதல் ஆணையர்கள் மேற்பார்வையில் சுமார் 9 ஆயிரம் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையம், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதலமைச்சரின் சுதந்திர தின விருது
முதலமைச்சரின் சுதந்திர தின விருது

இந்த நிலையில், நாளை சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேருரையாற்றும் நிகழ்வில், பலருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதில் 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விருது, சிறப்பாக பணியாற்றி வரும் ஆறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு நடந்த கொடூரம்.. தமிழக சட்டமன்றத்தின் கருப்பு நாள்.. - எடப்பாடி பழனிசாமி காட்டம்!

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்தல், சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயலாற்றி வரும் காவல்துறையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விருது அளிக்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

அவர்கள் சென்னை மாநகர காவல் துறை சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டொங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே மண்டலத்தின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குணசேகரன், நாமக்கல் மாவட்ட காவல்துறை துணை ஆய்வாளர் முருகன், நாமக்கல் மாவட்ட கிரேட்1 காவலர் குமார் ஆகிய ஆறு பேருக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Neet suicide: இருமுறை நீட் தேர்வில் தோற்றதால் மாணவன் தற்கொலை; தந்தையும் தற்கொலை செய்துக்கொண்ட சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.