ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

author img

By

Published : Nov 8, 2021, 4:08 PM IST

v
v

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி பொன்னி தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை முடிக்க அனுமதி கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (நவம்பர் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி, அலுவலர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை வழக்கு ஆவணமாக பயன்படுத்தினால் அதை முன்னாள் அமைச்சர் கீழமை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தற்போதைய நிலையில் அந்த அறிக்கையை வழங்க முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.

வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் திமுக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இருப்பு சாட்சிகளை பயன்படுத்தி விசாரணை - ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.