'தேநீருக்கு இரட்டைக்குவளை கூடாதெனில், குடிநீருக்கும் இரட்டைத் தொட்டி கூடாது' - திருமாவளவன் ஆவேசம்

author img

By

Published : Jan 17, 2023, 3:59 PM IST

திருமாவளவன் ஆவேசம்

வேங்கைவயல் ஊராட்சியில் நீர்த்தேக்கத்தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் குறித்து பேசிய தொல். திருமாவளவன் வேங்கைவயலில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி பேரழிவின் சின்னம் எனவும்; தேநீருக்கு இரட்டைக் குவளை கூடாதெனில், குடிநீருக்கும் இரட்டைத் தொட்டியும் கூடாது எனவும் கூறியுள்ளார்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் ஊராட்சியில் மனித மலம் கலந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கோரிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

வேங்கைவயல் ஊராட்சியில் உள்ள பட்டியலின காலனிக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. மேலும் காலனியை அவமானத்தில் இருந்து காப்பாற்ற எந்த தடயமும் இல்லாமல் நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "வேங்கைவயலில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட குடிநீர்த்தொட்டி பேரழிவின் சின்னம். அது இருந்த சுவடே இல்லாத வகையில் இடிக்கப்பட வேண்டும். ஆதிதிராவிட சமூகத்தினருக்கு என தனிக் குடிநீர்த்தொட்டி அமைக்க கூடாது. ”தேநீருக்கு இரட்டைக் குவளை கூடாதெனில், குடிநீருக்கும் இரட்டைத் தொட்டி கூடாது’’!" என அவர் கூறினார்.

தீண்டாமையின் அடையாளமாக உள்ள தொட்டியை முற்றிலுமாக இடிக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), கோரிக்கை விடுத்துள்ளது. ஜனவரி 21ஆம் தேதி தொட்டி இடிப்புக்காக DYFI மாபெரும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், தண்ணீர் தொட்டிகளில் மனிதக் கழிவைக் கொட்டிய குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய உள்ளூர் காவல் துறையினருக்கு சமூக சேவகர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு தமிழ்நாடு காவல்துறையின் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் நம்மிடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில், "தமிழ்நாட்டில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை என்ற பெயரில் சாதிகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நடந்தாலும், வேங்கைவயலில் நடந்த சம்பவம் ஒரு கொடூரமான செயல் ஒன்றாகும்.

எனவே, தீண்டாமையின் சின்னமாகவும், அடையாளமாகவும் இருக்கின்ற இந்த தொட்டியை இடிக்க வேண்டும். அப்படி இடித்தால்தான் இது போல சாதிப் பிரச்னைகள் குறையும். குற்றம் செய்வோருக்கும் ஒரு பாடமாக இருக்கும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: சே குவேரா மகள் அலெய்டா குவேரா சென்னை வருகை; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.