ETV Bharat / state

"பிரதமரின் வருகையின்போது பாதுகாப்பு குளறுபடி இல்லை" - டிஜிபி சைலேந்திர பாபு!

author img

By

Published : Nov 30, 2022, 12:51 PM IST

Updated : Nov 30, 2022, 3:55 PM IST

there
there

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வந்தபோது எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் இணைய குற்றங்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இணைய குற்றங்கள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் உரையாற்றினார்.

பொதுமக்கள் இணைய வழியில் நடைபெறும் மோசடிகள் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், இணைய வழி மோசடி மூலம் பணத்தை இழந்தால், 1930 என்ற எண்ணில் காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, பிரதமரின் தமிழக வருகையின்போது பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிஜிபி, "தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகை தந்தபோது எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை. தமிழக காவல்துறையினர் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் நவீன கருவிகள்- ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. பல ஆண்டு காலமாக இதே நடைமுறைதான் காவல்துறையில் பின்பற்றப்படுகிறது.

தமிழ்நாடு காவல்துறையிடம் அதிக எண்ணிக்கையில் தரமான உபகரணங்கள் உள்ளன. தமிழ்நாடு காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களை கையாளுகிறது. அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்புக்கு செல்கிறது. மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் உபகரணங்கள் கேட்டு வாங்கும் அளவிற்கு தரமான உபகரணங்கள் உள்ளன" என்றும் தெரிவித்தார்.

மேலும், என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் நேற்று சந்திப்பு நடைபெற்றதாகவும், அப்போது கோவை குண்டுவெடிப்பு தவிர தமிழகத்தில் உள்ள 15 என்.ஐ.ஏ வழக்குகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாகவும் டிஜிபி குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல்" ஆளுநரிடம் அண்ணாமலை புகார்!

Last Updated :Nov 30, 2022, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.