ETV Bharat / state

திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் - திருப்பூர் சுப்ரமணியம்

author img

By

Published : Jun 1, 2020, 5:53 PM IST

திருப்பூர் சுப்ரமணியம்
திருப்பூர் சுப்ரமணியம்

சென்னை : ஜூன் 15ஆம் தேதிக்கு மேல் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க்கக்கூடும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

கரோனா பொது முடக்கத்தால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சினிமா அரங்குகளையும் தியேட்டர்களையும் பராமரிப்பு பணிகளுக்காக திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் பராமரிப்பு பணிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசுகையில்,

”தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தால், உள்ளிருக்கும் விலைமதிப்பற்ற பொருட்கள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதலே, வாரம் ஒரு நாள் திரையரங்குகளைத் திறந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

வாரத்திற்கு ஒருமுறை ப்ரொஜெக்டர்களை இயக்கி படங்களை அரை மணி நேரத்திற்கு திரையிட்டு, அவற்றை சோதித்துப் பார்த்து வந்தோம். அதேபோல் திரையரங்கில் உள்ள ஜெனரேட்டரை வாரம், 10 நிமிடங்கள் வரை இயக்கி, சோதனைகள் மேற்கொள்கிறோம்.

மேலும் திரை அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள சீட்டுகள் மிகவும் விலை உயர்ந்தவை. சாதாரண திரையரங்குகளில் உள்ள சீட்டுகள் சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ளவை. ஆனால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள சீட்டுகள் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இருக்கைகள். இந்த இருக்கைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

இதே போன்று திரையரங்கில் உள்ள கழிவறைகளையும் முறையாக பராமரித்து வருகிறோம். வெளிநபர்கள் அல்லாமல் இரண்டு அல்லது மூன்று பணியாளர்களை வைத்து இது போன்ற பராமரிப்பு பணிகள் வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவும் இல்லை. நாங்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதை, அரசு தடுக்கவும் இல்லை. ஆகையால் வாரத்தில் ஒரு நாள் அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

அரசு எப்போது திரையரங்குகளை இயக்குவதற்கு அனுமதி அளித்தாலும், உடனே திரையரங்குகள் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ள நிலையில் அனைத்தையும் முறையாக பராமரித்து தயாராக வைத்துள்ளோம். திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியை ஜூன் 15ஆம் தேதிக்கு மேல் மத்திய அரசு வழங்கும் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் அட்லீயின் திரைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.