ETV Bharat / state

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் திடீர் ஆய்வு

author img

By

Published : May 21, 2023, 10:50 PM IST

Etv Bharat
Etv Bharat

டாடா டெக்னாலஜீஸ் லிட்., நிறுவனத்துடன் இணைந்து ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் ரூ.31 கோடி செலவில் ஆய்வகங்கள் அமைக்கும் பணியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.

சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பிற்கான படிப்பாக கருதப்படும் ஐடிஐ. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இந்த ஐடிஐ படிப்பை படித்தாலும் மாணவர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது. இதனை சரிசெய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், படிக்கும் போதே மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொழிற்பயிற்சி நிலையங்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று (மே 21) திடீர் ஆய்வு மேற்கொண்டார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டம் ரூ.2877.43 கோடி செலவினத்தில் டாடா டெக்னாலஜீஸ் லிட்., நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. 5 நீண்டகால மற்றும் 23 குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி 1.8.2023 முதல் தொடங்கவுள்ளது. இத்திட்டத்திற்கான பணிமனை கட்டிடங்கள் அமைத்திட ஒவ்வொரு நிலையத்திற்கும் தலா ரூ.3.73 கோடி வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இனி இருக்காது' உறுதியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

டாடா டெக்னாலஜீஸ் லிட்., நிறுவனத்துடன் இணைந்து ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் ரூ.31 கோடி செலவில் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளதனை கிண்டி மற்றும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவு பெற்று துவக்க விழாவிற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீர ராகவ ராவ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு - பிரதமர் மோடி மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.