ETV Bharat / state

தாயின் சடலத்தை டிரம்மில் போட்டு அடக்கம் செய்த மகன்!

author img

By

Published : May 16, 2022, 2:58 PM IST

உயிரிழந்த தாயின் சடலத்தை டிரம்மில் போட்டு சிமெண்ட் கலவையால் பூசி அவரது மகன் அடக்கம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் சடலத்தை டிரம்மில் போட்டு அடக்கம் செய்த மகன்!
தாயின் சடலத்தை டிரம்மில் போட்டு அடக்கம் செய்த மகன்!

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் 86 வயதான மூதாட்டி செண்பகம். இவருக்கு சுரேஷ் மற்றும் பாபு என இரு மகன்கள் உள்ளனர். இதில் சுரேஷ் என்பவருடன் மூதாட்டி செண்பகம் வசித்து வந்துள்ளார். மேலும் சுரேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனால் சுரேஷின் மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக தாய் செண்பகத்தை காணவில்லை. எனவே, அக்கம்பக்கத்தினர் மற்றும் அண்ணனாகிய பாபு ஆகியோர் சுரேஷிடம் அவரது தாய் குறித்து கேட்டுள்ளனர். இதற்கு சுரேஷ் முரணாகவே பதிலளித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சுரேஷின் வீட்டிற்கு தனது தாயான மூதாட்டி செண்பகத்தை இன்று பார்க்க வந்த போது சுரேஷ் பார்க்கவிடாமல் தடுத்து பாபுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பாபு நீலாங்கரை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இவ்வாறு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் சுரேஷ், தாய் செண்பகம் உடல்நலக்குறைவால் சில நாள்களுக்கு முன்பாக உயிரிழந்து விட்டதாகவும், அவரை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டு சிமெண்ட்டால் பூசி அடக்கம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த போலீசார், டிரம்மில் உள்ள மூதாட்டி செண்பகம் உடலை மீட்க முடியாத காரணத்தால், டிரம்முடன் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் வழக்கறிஞரை நடுரோட்டில் தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.