ETV Bharat / state

New year celebration: தமிழ்நாடு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?

author img

By

Published : Dec 31, 2022, 3:50 PM IST

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசாரும், சென்னையில் 17,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்; கட்டுப்பாடுகள் விதித்துள்ள காவல்துறை
புத்தாண்டு கொண்டாட்டம்; கட்டுப்பாடுகள் விதித்துள்ள காவல்துறை

சென்னை: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சில கட்டுப்பாடுகளை தமிழக போலீசார் விதித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை பொதுமக்கள் பொது இடங்களிலும், சாலைகளிலும் கொண்டாடுவதை தவிர்த்து, வீடுகளில் கொண்டாட அறிவுறுத்தி உள்ளனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் 90,000 காவல்துறையினரும், 10,000 ஊர்காவல்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் வாகன சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் நட்சத்திர ஹோட்டல்களில் 80% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் இரவு 1 மணிக்கு மேல் எந்த வித பார்ட்டிகளும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

இதே போல புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் மட்டும் 16,000 காவல்துறையினரும், 1500 ஊர்காவல் படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க சென்னையின் முக்கிய சாலைகளில் 368 வாகன சோதனை சாவடிகள் அமைத்து தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று இரவு 8 மணி முதல் ரிசர்வ் வங்கி முதல் லைட் ஹவுஸ் வரையிலான காமராஜர் சாலை மூடப்பட்டு, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துகள் ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக, இரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் ஒன்றாக பயணித்தால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதே போல குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை டிராவல்ஸ் மூலமாக பாதுகாப்பாக அனுப்ப ஊபர் நிறுவனத்துடன் இணைந்து சென்னை காவல்துறை செயல்படுகிறது. முக்கியமான இடங்கள், நட்சத்திர ஹோட்டல், வாகன சோதனை சாவடி ஆகிய இடங்களில் QR கோர்டு ஒட்டப்பட்டுள்ளது. குடிபோதையில் இருப்பவர்கள் QR கோர்டை ஸ்கேன் செய்த உடன் வரக்கூடிய வாகனங்களில் பயணிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது.

இதனை மீறி மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க ANPR சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் ரோந்து பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தொடர் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு பொதுமக்கள் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதே போல புத்தாண்டை ஒட்டி தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் 1,600 க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், முக்கிய ரயில்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் முழுவதுமாக பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாமக தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ்.. விழுப்புரத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.