ETV Bharat / state

டெண்டர் முறைகேடு புகார்; சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் சஸ்பெண்ட்?

author img

By

Published : May 28, 2023, 10:46 PM IST

Complaint of tender malpractice in Chennai Corporation
பொறியாளர் நந்தகுமார்

டெண்டர் முறைகேடு புகாரில் சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் நந்தகுமாரை தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: சென்னை மாநகராட்சியில் நந்தகுமார் என்பவர் தலைமை பொறியாளராக பணியாற்றி வருகிறார். அதிமுக ஆட்சியின் போது, பல்வேறு டெண்டர்களில் இவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டது. மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் இவர் தலைமை பொறியாளராக பொதுத்துறையில் இருந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பூங்காத்துறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை மேற்கோள் காட்டி நந்தகுமாரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, 'அறப்போர் இயக்கம்' (Arappor Iyakkam) சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், "2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் 400 பேருந்து நிழற்குடை டெண்டரில் ஊழல் மற்றும் பணமோசடிக்கு எதிராக அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி புகார் அளித்தது. அப்போது நந்தகுமார் சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு பொறியாளராக இருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது இந்தப் புகாரை விசாரித்து வருகிறது. இந்த டெண்டர்கள் அனைத்தும் மோசடியான டெண்டர் மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு இந்த டெண்டர் விடப்பட்டபோது, நந்தகுமார் BRR-இன் பொறியாளராக இருந்தார். அவர் டெண்டர் மற்றும் பிற சட்டங்களை மீறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உதவியாளர்களுக்கு டெண்டர் வழங்குவதற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். 15 ஆண்டுகளில் ரூ.400 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலத்திற்கு முன்பே அவர் செய்த செயல்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், அவரை தற்போது உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர் இந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். கடைசி தேதி வரை அரசு காத்திருக்கக்கூடாது. இறுதியில் அவர் சேவையிலிருந்து நீக்கப்பட்டதும் முக்கியமானது. அவருக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் முக்கியமானது. ஏனெனில், அவர் சேவையில் இருந்த போது அவரது ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தும் வெட்கக்கேடானது. அவரை ஓய்வு பெற அரசாங்கம் அனுமதித்தால், அது மிகவும் மோசமான முன்னுதாரணமாக அமையும். அவரை சஸ்பெண்ட் செய்து பணிநீக்கம் செய்த அரசின் நடவடிக்கை, மற்ற அரசு ஊழியர்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க உதவும்" என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாநகராட்சி தலைமை பொறியாளரான நந்தகுமாரை தமிழ்நாடு அரசு பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் வரும் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். தற்போது பணியிடைநீக்கம் செய்ததால் இவருக்கு அரசு ஓய்வூதிய பயன்கள் கிடைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: IT Raid:செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் சோதனை - ரூ.3.5 கோடி பறிமுதல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.