ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்படமாட்டாது- நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

author img

By

Published : May 12, 2022, 7:48 PM IST

’ஆறு வாரங்களுக்கு கோயில் நிதி பயன்படுத்தப்படமாட்டாது’ - நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

கோவில் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் தொடங்குவதை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன் மற்றும் எலங்கியம்மன் கோவில் நிதியில் இருந்து ரூ.16.30 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருந்து ரூ.13.50 கோடி, பழனி தண்டாயுதபாணி கோவிலில் இருந்து ரூ.15.20 கோடி நிதியை பயன்படுத்தி முதியோர் இல்லங்கள் தொடங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி அறநிலையத் துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டப்படி கோவில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், அறங்காவலர்கள் நியமனத்துக்காக அரசு குழுக்கள் அமைத்துள்ளதாகத் தலைமை வழக்கறிஞர் கூறிய போது, கோவில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கக் கோரிய அரசு தலைமை வழக்கறிஞர், அதுவரை கோயில் நிதியை பயன்படுத்தப் போவதில்லை என உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மெட்ரோ ரயிலின் 4ஆம் வழித்தடம் அமைக்கும் திட்டம்: அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.