ETV Bharat / state

தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளில் நடந்த போலீஸ் என்கவுன்ட்டர்கள் - ஷாக்கிங் ரிப்போர்ட்!

author img

By

Published : Aug 1, 2023, 6:07 PM IST

Tamilnadu Police
போலீஸ் என்கவுண்டர்கள்

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் இன்று காலை இரண்டு ரவுடிகள் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் 94 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையினரின் என்கவுன்ட்டர் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் இன்று(ஆகஸ்ட் 1) அதிகாலை 4 மணியளவில் காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்த முயன்றபோது, அந்த கார் நிற்காமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல சென்று காவல்துறை வாகனத்தின் மீது மோதியது. பின்னர் காரில் இருந்து இறங்கிய நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் வந்து, உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை வெட்டி கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, காவல் ஆய்வாளர் முருகேசன் தனது துப்பாக்கியை எடுத்து, ரவுடிகள் வினோத் என்கிற சோட்டா வினோத்(35), ரமேஷ்(32) ஆகிய இருவரை என்கவுன்ட்டர் செய்தார். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இருவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்றும், இருவர் மீதும் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் என்கவுண்டர்கள்:

தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் தகவல்படி, தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் 94 பேர் என்கவுன்ட்டர்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை தமிழ்நாடு முழுவதும் 94 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 23 என்கவுன்ட்டர்கள் செய்யப்பட்டுள்ளன.

  • 1998ஆம் ஆண்டு மோகன் மற்றும் ஆசைதம்பி ஆகியோர் சென்னையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
  • 1999ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பவுல், திருச்சியில் கோசிஜின், சென்னையில் மிலிட்டரி குமார், தருமபுரியில் ராஜேந்திரன் ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
  • 2000ஆம் ஆண்டு தருமபுரியில் ரவிச்சந்திரன், தஞ்சாவூரில் கிருஷ்ணன், கடலூரில் மணிமாறன் மற்றும் பன்னீர், திருச்சியில் பிச்சைமுத்து, தேனி மாவட்டத்தில் கோபால் மற்றும் பசும்பொன், மதுரை மாவட்டத்தில் சாகுல் ஹமீது மற்றும் மாரி, மதுரையில் பாலன் மற்றும் தேனியில் உடையன், ராமர் ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
  • 2003ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் ரவுடி வீரமணி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
  • 2006ஆம் ஆண்டு ரவுடி பங்க் குமார் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
  • 2007ஆம் ஆண்டு சென்னையில் போலீசாருடன் நடந்த மோதலில் ரவுடி வெள்ளை ரவி சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • 2010ஆம் ஆண்டு கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கால் டாக்ஸி டிரைவர் மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே ஆண்டில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகியோரும் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
  • 2012ஆம் ஆண்டு சிவகங்கையைச் சேர்ந்த எஸ்ஐ ஆல்வின் சுதனை கொலை செய்த ரவுடிகள் பிரபு, பாரதி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே ஆண்டு, தென்சென்னையை கலங்கடித்த வங்கி கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் ஒரே இடத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர். வேளச்சேரியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அவர்களை தென்சென்னை இணை ஆணையராக இருந்த சண்முக ராஜேஷ்வரன் தலைமையிலான போலீசார் சுட்டு கொன்றனர்.

மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு: ரவுடிகள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை போலீசார் சுட்டுப் பிடிக்கும் நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தாலும், மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் கூறுகையில், "ஆயுதங்களைப் பயன்படுத்தி எந்த ஒரு குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறவில்லை. மாறாக குற்றவாளிகள் அதிக பலத்துடன் இருக்கும்போது, அதற்கு சமமான பலத்துடன் சென்று போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், காவல்துறை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது, சுட்டுப் பிடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்க விஷயம்" என்றார்.

இதையும் படிங்க: Chennai Police Encounter: சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.