ETV Bharat / state

தமிழ்நாட்டு செவிலியர்கள் வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கேயே பணியாற்ற வேண்டும் - கவிஞர் வைரமுத்து அன்புவேண்டுகோள்

author img

By

Published : Jan 29, 2023, 3:59 PM IST

தமிழ்நாட்டு செவிலியர்கள் வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கேயே பணியாற்ற வேண்டும்- வைரமுத்து
தமிழ்நாட்டு செவிலியர்கள் வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கேயே பணியாற்ற வேண்டும்- வைரமுத்து

'தமிழ்நாட்டில் செவிலியர்கள் படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் இங்கேயே வேலை செய்ய வேண்டும்' என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கில் தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் "காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டை'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு கவிஞர் வைரமுத்து பேசும்போது, 'காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து குறித்த முதல் மாநாட்டை நடத்தும் மருத்துவர்களை வணங்குகிறேன். பேராசிரியர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் சொல்லிச் சென்ற ஒரு வாசகத்தை முதலமைச்சர் வாய்விட்டு, அதை உற்று கவனித்து ரசித்தார். சாதிப்பது என்பதும் தொண்டு செய்வது என்பதும் ஆட்சி அதிகாரம் செய்வதும் முதலமைச்சருக்கு மரபணுவிலுள்ளது என மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார். நாங்கள் நெகிழ்ந்து போனோம்.

முதலமைச்சர் முதலில் கல்வி, பின்னர், மருத்துவம் இவ்விரண்டையும் கண்ணாக எண்ணி பணியாற்றி வருகிறார். அதனால் தான் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து, அதற்கானப் பணிகள் இரவு பகலாக பணி நடக்கின்றன. அதனை கண்காணித்து வருகிறார்.

எய்ம்ஸ் எய்ம்ஸ் என கூறுகின்றனர். அது எப்போது வரும் எனத் தெரியாது. எய்ம்ஸை எட்டும் முன்னர், பன்னோக்கு மருத்துவமனை என்னும் தன் எய்மை முதலமைச்சர் எட்டி விடுவார். முதலமைச்சர் பதவி ஏற்கும் போது, நோய் காலமாக இருந்தது. நோயை எப்படி வெல்வது என்று காட்டினார். கரோனா காலத்திலும் தன் திறனை பயன்படுத்தி வென்றவர்.

நோயாளிக்கும், தங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீங்கள் தமிழால் குறைக்கிறீர்கள். நோயாளிக்கு தமிழில் சொல்லிக் கொடுங்கள், கற்றுக் கொடுங்கள். காதில் உள்ள செவி வளையம் காக்ளியர் என்பது தான் கேட்கப் பயன்படும். காதின் மடல் தான் காது என நினைக்கின்றனர். அதன் உள் இருக்கும் செவியை பாதுகாப்பதற்கான வளையம் தான் செவி மடல். தமிழில் இதற்கு உள் செவி, அகச்செவி என கூறுவதா என கலைச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், மூக்கு சுவாசுக்கிறது என்பதாகத் தான் பலர் நினைத்துக் கொண்டிருகின்றனர். மூக்கு 500 கன அடி காற்றை சுவாசிக்கின்றது என்பதை சொல்லிக்கொடுங்கள். எதை எதையோ கடவுள் என எண்ணிக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டம், இதயம், சிறுநீரகம், கல்லீரல், தொண்டை, கழுத்து, மூக்கு, தலை ஆகிய உடல் உறுப்புகளை கொண்டுள்ள நம் உடம்பு தான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள் என்பதை பாமர மக்களுக்கு சொல்லிக் கொடுங்கள். இதனை சொல்லிக் காெடுத்தால், மனிதன் யாரும் ஏழையில்லை என்பதை உணர்வான். சிறுநீரகம், இதயம், கல்லீரல் ஆகியவற்றின் விலை என்ன என்பதை பார்த்தால், மனிதன் ஏழை இல்லை என்பதை உணர்வான்.

40 ஆயிரம் வாசனைகளை மூக்கு உறிஞ்சி உள்ளே செலுத்துகிறது. மூக்கின் 2 துவாரங்களை அடைத்துக் கொண்டு பேசினால் குரலை கேட்க முடியாது. மூக்கும், குரலும் இணைந்து செயல்படும் திறன் உடையது. ஜீரணம் மூக்கிலேயே தொடங்கி விடுகிறது, மூக்கு வாசனையைத் தூண்டி மீன், கருவாடு போன்றவற்றின் வாசனையை உணர்ந்து ஜீரணத்தைத் தொடங்கிறது. தொண்டை உணவை குடலுக்குப் பிரித்து அனுப்புகிறது.

ஒரு ஆய்வில் கூறப்பட்ட தகவலை முதலமைச்சர் முன்னிலையில் கூறுவது சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன். 2000 பேருக்கு மருத்துவர்கள் இருக்கின்றனர். 1000 பேருக்கு மருத்துவர் தேவை. சரி பாதி மருத்துவர்கள் தேவையாக இருக்கிறது. அதற்கு மருத்துவக்கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் செவிலியர்கள் படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் இங்கேயே வேலை செய்ய வேண்டும். நோயாளிக்கும், மருத்துவருக்கும் இடையிலான இடைவெளி இம்மாநாட்டின் மூலம் குறையும் என நம்புகிறேன். இதய நோய், சிறுநீரக, கல்லீரல் மருத்துவத்திற்கும் தமிழில் மாநாட்டை நடத்தி கலைச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்' எனப் பேசினார்.

இதையும் படிங்க:சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.