ETV Bharat / state

மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட பல மாநிலங்களில், தமிழகம் முன்னோடி மாநிலம்: முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Dec 9, 2022, 6:35 PM IST

மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட பல மாநிலங்களில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட பல மாநிலங்களில், தமிழகம் முன்னோடி மாநிலம்: முதலமைச்சர் ஸ்டாலின்
மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட பல மாநிலங்களில், தமிழகம் முன்னோடி மாநிலம்: முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "சர்வதேச மனித உரிமைகள் நாள்"-க்காக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்டையிலும், மதிப்பு மற்றும் உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், அனைவரும் மனசாட்சியுடனும் சகோதர மனப்பான்மையுடனும் செயல்படவேண்டும் என்ற நோக்கில் “சர்வதேச மனித உரிமைகள் நாள்” ஆண்டுதோறும் டிசம்பர்-10 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1948-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (United Nation General Assembly) பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து, மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. இதன்மூலம் மக்களின் விடுதலை, சுயமரியாதை மற்றும் மனித நேயத்தை முழுமையாக அனுபவிப்பதைத் தடுக்கும் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

பல நாடுகளில் இனவெறிச் சட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டன; பெண்களை இரண்டாம் தர நிலைக்கு தள்ளும் சட்ட மற்றும் சமூக நடைமுறைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன; சிறுபான்மையினர் தங்கள் மத நம்பிக்கையை எந்தவித அச்ச உணர்வுமின்றி கடைபிடிக்க வழி ஏற்பட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட பல மாநிலங்களில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் 17.04.1997 முதல் செயல்பட்டுவருகிறது. செயல்படத்துவங்கிய முதல் ஆண்டிலேயே 2162 புகார்கள் இந்த ஆணையத்தால் பெறப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டுள்ளன. 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் ஆகஸ்ட் 2022 வரை இவ்வாணையத்திற்கு வரப்பெற்ற 2,45,688 புகார்களில் 2,06,762 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

1993-ஆம் ஆண்டின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டம், மனித உரிமைகள் கல்வி, உளவியல் மற்றும் குற்றவியல் ஆகியவற்றை பாடமாகப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ‘நிலையப் பயிற்சி‘ (Internship) வழங்கப்படுகிறது.

மேலும், இக்கல்லூரி மாணவர்கள் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஆணையத்தின் செயல்பாட்டைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கும் ஊக்குவிக்கப்படுவது பாராட்டுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மிக்கு 35-வது பலி; ஆளுநர் இனியும் தாமதிக்க வேண்டாம் - அன்புமணி வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.