சிங்கப்பூர், ஜப்பான் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. யார் யாரை சந்திக்கிறார் தெரியுமா?

author img

By

Published : May 22, 2023, 8:43 PM IST

Updated : May 23, 2023, 7:01 AM IST

Stalin

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில், இரு நாடுகளின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், வரும் ஜனவரியில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(மே.23) பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கியப் பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை லட்சிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது.

இந்த இலக்கை அடைந்திட, 23 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடவும் வேண்டும். இந்த நோக்கத்திற்காக, தொழில்துறை பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஜூலை 2021 முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழ்நாட்டில் 2,95,339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-ல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சருடன் தொழில் துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் செல்கிறார்கள்.

23.5.2023 அன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்று, அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனையும், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தையும், அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் அதிபர்கள் - முதன்மைச் செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்.

அன்று மாலை நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் பேம்டிஎன், டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான SUTD (Singapore University of Technology & Design), சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு-SIPO (Singapore India Partnership Office) மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு-SICCI (Singapore Indian Chamber of Commerce and Industries) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.

அண்மையில் உலக அளவில் முன்னணி குளிர்சாதன இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம் 1,891 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய நிசான் நிறுவனம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் 3,300 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்தது மட்டுமல்லாமல், தனது தொழில் நடவடிக்கைகளை நம் மாநிலத்தில் மேலும் விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்த உறவை மேலும் மேம்படுத்தும் வகையில்தான், முதலமைச்சர் முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி ஜப்பான் செல்கிறார். அங்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க இருக்கிறார். ஜப்பான் நாட்டில், ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட உள்ளன.

இதுவரை ஜப்பான் சென்றுள்ள அரசுக் குழுக்கள் டோக்கியோ மட்டுமே சென்று வந்துள்ளனர். ஒசாகாவில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு பல முன்னணி தொழில் நிறுவனங்களும் அமைந்துள்ளன. எனவே, ஒசாகா நகருக்கும் வருகை தரும்படி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முதல்முறையாக ஒசாகா நகருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையில் இந்தக் குழு செல்ல உள்ளது.

ஒசாகாவில், ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோ (JETRO) நிறுவனத்துடன் இணைந்து அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். மேலும் முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

டோக்கியோ நகரில் அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிஷூமுரா யசுதோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோவை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். மேலும், 200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்து கொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்கள். கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், அங்குள்ள மேம்பட்ட தொழில் மையத்தைப் பார்வையிட உள்ளார். தமிழ்நாட்டிற்கும், ஜப்பானுக்கும் இடையே நீண்ட நெடிய வரலாற்று உறவு இருந்து வருகிறது. இந்த உறவு மேலும் வலுவடையும் வகையில், இந்த அரசு முறைப் பயணம் அமைந்திடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கலைஞர் நூற்றாண்டு விழா: அமைச்சர்களை உள்ளடக்கி தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும் - முதலமைச்சர்!

Last Updated :May 23, 2023, 7:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.