நாளை சிங்கப்பூர் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

author img

By

Published : May 22, 2023, 4:19 PM IST

stalin

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி நாளை காலை சிங்கப்பூர் புறப்படுகிறார்.

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில் துறையை மேம்படுத்துவதில் அக்கறை காட்டி வருகிறது. தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை அடையும் நோக்கில், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டு தொழில் துறை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான குழு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய், அபுதாபி நாடுகளுக்குப் பயணம் சென்றது. அதில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. துபாயைச் சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம், ஒயிட் ஹவுஸ் நிறுவனம், டிரான்ஸ்வேர்ல்டு குழுமம் ஆகியவற்றுடன் தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் அமைச்சர்களுடன் ஆலோசனை

அதேபோல், கடந்த 11ஆம் தேதி, ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. ஹூண்டாய் நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, முதலமைச்சர் நாளை(மே.23) காலை 11.25 மணிக்கு விமானம் மூலம் சிங்கப்பூர் செல்கிறார்.

நாளை மாலை சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர், நாளை மறுநாள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார். சிங்கப்பூர் தொழிலதிபர்கள் உடனான இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

அதனைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஜப்பானில் தங்கி முதலீட்டார்களை சந்திக்கும் முதலமைச்சர், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அழைப்பு விடுக்க உள்ளார். பின்னர், சிங்கப்பூர், ஜப்பானில் 9 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு வரும் 31ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

இதையும் படிங்க: தமிம்நாடு தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலமாக மாற்றப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.