ETV Bharat / state

தென் மாவட்ட கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 8:14 PM IST

Tamil Nadu CM appoints 4 IAS due to heavy rain: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கண்காணிப்பு அலுவலர்களாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை எதிரொலி; 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
கனமழை எதிரொலி; 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையம் 17.12.2023 நாளிட்ட அறிவிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதி கனமழையினை எதிர்கொள்ள முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில், பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் பெருமக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (17-12-2023) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதி கனமழையினை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், உடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நில நிர்வாக ஆணையர் சு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திற்குத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அதிகாரி இரா. செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வணிகவரித் துறை அதிகாரி பா.ஜோதி நிர்மலா, தென்காசி மாவட்டத்திற்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அதிகாரி சுன்சோங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த ஊரக வளர்ச்சி இயக்குநர், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் நகராட்சிகளின் இயக்குநரையும், கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையரையும் இம்மாவட்டங்களில் இருந்து பணிபுரிய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில், கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர் பிரகாஷ், ஊரக வளர்ச்சி இயக்குநர் பா. பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சு.சிவராசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிக கனமழை பெய்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குத் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 90 வீரர்கள் கொண்டு 3 குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் விரைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்கள் கொண்ட தலா இரண்டு குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக விரைந்துள்ளன.

அதிக கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 2.18 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

17-12-2023 மற்றும் 18-12-2023 ஆகிய நாட்களில் தென் தமிழ்நாடு மற்றும் அதனை அடுத்துள்ள வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா, இலங்கை மற்றும் தென் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

19-12-2023 தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து மேற்சொன்ன பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காகத் தேவைப்படும் இடங்களில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் மூலம் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், அதிக கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ளத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்குப் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளிலிருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்குத் தேவையான பால் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களையும், போதுமான படகுகளையும் நிலைநிறுத்த வேண்டும்.

ரொட்டி, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.

பொது மக்களுக்கான அறிவுரை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும். முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

நீர்நிலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல் ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அவசர உதவிக்குப் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் – 1070, வாட்ஸ் அப் எண். – 94458 69848, மாவட்ட அவசரக் கால செயல்பாட்டு மையம் – 1077 மேற்சொன்ன மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, கனமழையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிருவாகங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை..அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.