ETV Bharat / state

மோடிக்கு முதலமைச்சர் கடிதம் - இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அனுப்ப கோரிக்கை

author img

By

Published : Apr 29, 2022, 9:59 PM IST

இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க அனுமதி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.

இதுதொடர்பாக, கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று, தங்களிடம் நேரிலும், ஏப்.15ஆம் தேதியன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் தான் எழுதிய கடிதத்திலும், அவருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருள்களையும், உதவிகளையும் வழங்குவதற்கு ஒன்றிய அரசின் அனுமதியைக் கோரியிருந்தேன்.

ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கப்பெறவில்லை. இதற்கிடையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருள்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

இத்தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற விவாதத்தின்போது, அவையில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சட்டப்பேரவைக்கட்சிகளும், இலங்கையில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இவ்விடயத்தில் மேலும் தாமதிக்காமல் உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தின” என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாடு மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச்செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்கிடுமாறு கோரியுள்ளார்.

அத்தோடு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் இந்தியப் பிரதமரின் கவனத்திற்கு இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா என்றால் வர்த்தகம்... செமிகான் மாநாட்டில் பிரதமர் மோடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.