ETV Bharat / state

"தைத்திருநாளை சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடுங்கள்" - திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலினின் மடல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 5:41 PM IST

Etv Bharat
Etv Bharat

M.K. Stalin: அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை: சாதி - மத பேதமற்ற சமத்துவத் திருநாள் ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் ஏதுமின்றி திராவிடர்களாம் தமிழர்களின் தனிச் சிறப்புமிக்க தொன்மைமிகு பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்திருப்பது தை முதல் நாளாம் பொங்கல் திருநாள். அத்திருநாளான பொங்கலை கொண்டாடவுள்ள உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆண்டின் இறுதியில் மிகப்பெரிய பேரிடரை தமிழகம் சந்தித்து வட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை என மிகப்பெரிய பாதிப்புகளை தமிழகம் எதிர்கொண்டது. இந்த பேரிடரையும் எதிர்கொண்ட தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண தொகை அறிவித்தது.

மேலும் தென் மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரண தொகை, கால்நடைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம், வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் என பல்வேறு வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

இவ்வளவு பெரிய பேரிடரிலிருந்து மக்கள் மீண்டு வரவும், இதனை இயற்கை பேரிடராய் அறிவிக்க வேண்டும் என பிரதமரை தனிபட்ட முறையிலும் தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையிலும் நேரில் சந்தித்து தெரிவித்தேன் மற்றும் நிவாரண தொகையும் கேட்டிருந்தேன். ஆனால் நாம் கேட்ட நிவாரண தொகையும் கிடைக்கவில்லை, இயற்கை பேரிடர் எனவும் அறிவிக்கவில்லை. இருப்பினும் மக்களுக்கான பணிகளை நாம் செய்ய வேண்டும் என களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டோம்.

தமிழகத்தில் நிதி நெருக்கடி இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் மனதில் பொங்கல் இனிப்பு பொங்கும் வகையில் 2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசுத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,436.19 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளும், வேட்டிகளும் ஏழை - எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகள் மூலம் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு முன்பே வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது அரசு.

பல மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் பல்வேறு திட்ட செயம்பாடுகளை நடைமுறைபடுத்தி வருகிறது தமிழக அரசு. அந்த வகையில் காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் என பல்வேறு திட்டங்களை முன்மாதிரியாக செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.

'தை' பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21ஆம் அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.

எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர்.

அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். உழைக்கிறேன்.. உழைக்கிறேன்..

ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு இளைஞரணிச் செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, "எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்" என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.

இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.

கழகத் தலைவர் என்கிற பொறுப்பு உங்களில் ஒருவனாகிய எனக்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒப்புதலுடன், பொதுக்குழுவின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு. முதலமைச்சர் என்கிற பொறுப்பு உடன்பிறப்புகளின் அயராத உழைப்பிலும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும் கிடைத்தது ஆகும்.

நம்பிக்கை வைத்து பொறுப்பினை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது. தலைவர் என்ற உரிமையோடும் அன்போடும் கட்டளையிடுவது, திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும் எனவும், எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள்.

இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் - மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.

கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.

பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு! தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய ஒன்றிய அரசில் சமூகநீதி – சமதர்ம - மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம்.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய பொங்கல் - தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்? என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.