ETV Bharat / state

தமிழ்நாட்டில் விரைவில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Oct 31, 2022, 5:00 PM IST

தமிழ்நாட்டில் தமிழ் வழியில் மருத்துவம் படிப்பதற்காக விரைவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விரைவில் தமிழ் வழி மருத்துவ கல்லூரி- மா.சுப்பிரமணியன்
சென்னையில் விரைவில் தமிழ் வழி மருத்துவ கல்லூரி- மா.சுப்பிரமணியன்

சென்னை: ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கி, பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த ஆண்டு தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் ஒரு கல்லூரி அமைத்திட வேண்டும். அது தமிழ் வழி மருத்துவக்கல்லூரியாக இருக்க வேண்டும் என்று கேட்டு இருந்தோம். ஆனால், முதலில் மருத்துவக்கல்லூரி இல்லாத இடங்களில் மருத்துவ கல்லூரி தொடங்கலாம் என முடிவு செய்துள்ளோம்.

அதன்படி தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கோரிக்கை பரிசீலனையில் இந்த ஆறு மருத்துவக்கல்லூரி வந்த பிறகு, சென்னையில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு,அது தமிழ் வழி மருத்துவக்கல்லூரியாக வர இருக்கிறது.

மூன்று மருத்துவப்பேராசிரியர்கள் கொண்ட குழு மருத்துவ பாடப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வருகின்றனர். முதலாண்டு மருத்துவக்கல்லூரி பாடப் புத்தகங்கள் மற்றும் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. புத்தகம் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு மொழிபெயர்ப்பு வல்லுநர்களோடு உடன் கொடுத்து சரி பார்க்கப்படும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாகப் பேசிய அவர், ''அறுவை சிகிச்சை இல்லாமல் புற்றுநோய் மற்றும் முதுகு தண்டுவடப் பாதிப்பினால் வலியோடு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மாற்று சிகிச்சையாக ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வேறு மருத்துவமனையில் இல்லாத வகையில் இந்த மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் உதவியோடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் இதுபோன்ற ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை மையம் அமைய உதவ வேண்டும் என்று ரோட்டரி சங்கத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

தனியார் மருத்துவமனையில் 40,000 வரை இந்தச் சிகிச்சைக்கு செலவு ஆகும். ஆனால், ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கான மருத்துவச்செலவு முதலமைச்சர் காப்பீடுத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மனநல சிகிச்சை, புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம், யோகா, உணவுக்கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து சிகிச்சை மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன கருவி இன்று இந்த மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முடியவில்லை - ஓபிஎஸ் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.