ETV Bharat / state

பிற இந்திய மொழிகளையும் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் கற்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By

Published : Jan 25, 2022, 6:33 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

பிற இந்திய மொழிகளையும் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் கற்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் நிறைவான நல்வாழ்த்துகளையும் என் இதயம் கனிந்த நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேச விடுதலை வீரர்கள்

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்த நாள் விழாவையும் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் தேசியப் பெருமிதத்தோடும் கொண்டாடி வருகிறோம்.

இந்த நன்னாளில், தேச விடுதலை வீரர்களை, அவர்களின் தியாகங்களுக்காகவும் இன்னல்களுக்காகவும் நினைவு கூர்கிறோம். வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், முத்துராமலிங்கத் தேவர், ஜானகி தேவர் உள்ளிட்ட பலரையும் எண்ணிப் பார்த்து, நம்முடைய நன்றி அறிதலை அவர்களுக்கு உரித்தாக்குகிறோம்.

மகத்தான தியாகிகளின் கனவு

தமிழ்நாட்டில் இருந்து பற்பல வீரர்களும் தியாகிகளும் தேச விடுதலை இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பலர், காலனி ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக நேதாஜியின் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியுள்ளனர்.

இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றவர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் நம்முடைய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். தம்முடைய வியர்வை-இரத்தம்-தியாகம் ஆகியவற்றால் நமக்குச் சுதந்திர அமுதத்தை அளித்த வீரர்களையும் தியாகிகளையும் அடையாளம் கண்டு கௌரவிக்கவேண்டும்.

இத்தனை நாள்கள், அவர்களின் பங்களிப்பை மறந்து, அவர்களை கவனியாமல் இருந்ததற்காக மன்னிப்புக் கோரவேண்டும். அவர்களின் இன்னல்கள் குறித்த வரலாற்றை வருங்காலத்திற்குச் சேமிக்கவேண்டும். வாராது போல வந்த மாமணியாம் சுதந்திரத்தைப் போற்றி, அந்த மகத்தான தியாகிகளின் கனவு பாரதத்தை, பொருள்செல்வம் செறிந்த, ராணுவ பலம் மிக்க, ஞானத்தில் உயர்ந்த, உலக சகோதரத்துவ நோக்கோடு ஆன்மிகத்தில் திளைத்த பாரதத்தை உருவாக்கவேண்டும்.

மண்ணோடு கலந்துவிட்ட பண்பாட்டு

பல்வேறு வேற்றுமைகளே, பாரதத்தின் அழகும் வலிமையும் ஆகும். மானுடத்தின் ஒற்றுமையையும், பிரபஞ்சப் படைப்போடு ஒன்றுபட்ட அதன் ஒருங்கிணைப்பையும் ஆதாரமாகக் கொண்ட பண்பாட்டுப் பெருமிதத்தில் வேரூன்றி, நம்முடைய மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒற்றைப் பெருங்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். நம்முடைய மண்ணோடு கலந்துவிட்ட பண்பாட்டு விழுமியங்கள், கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை, கட்ச் முதல் காமரூபம் வரை இருக்கும் பாரதீய குடிமக்களின் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

எல்லாக் காலத்திற்குமான ஓங்குயர் ஞானியான திருவள்ளுவர், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, தெய்வீகம் கமழுகிற புனிதத் திருக்குறளை நமக்கு அளித்துள்ளார். திருக்குறளில் காணப்படுகிற இம்மைக்கும் மறுமைக்குமான ஞானமே, பாரதத்தின் அழிவற்ற ஆன்மிகத்தின் ஊற்றுக்கண் எனலாம்.

தத்துவ ஞானிகள்

உலகின் மிகவும் புராதனமான வாழ்விலக்கியம் என்று கூறப்படக்கூடிய சங்க இலக்கியம், ஞான மற்றும் ஆன்மிகப் பரிணாமங்களின் உச்சகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. கவிஞர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் என்று பலரையும் பற்பல தலைமுறைகளுக்குச் சங்க இலக்கியம் ஊக்கப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பாரதீய குடிமகனின் உள்ளத்திலும் நிரந்தரக் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ராமனின் வாழ்க்கையைக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் பாடிக் கொடுத்துள்ளார்.

நாமெல்லோரும், நாயன்மார்களின், ஆழ்வார் பெருமக்களின், ஔவைப் பாட்டியின், ஆண்டாள் நாச்சியாரின் பெருமைக்குரிய குழந்தைகளாவோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, பாரத மாதாவின் பிள்ளைகளை இவர்கள் எல்லோரும் ஊக்கப்படுத்தியுள்ளனர். இனியும் தொடர்ந்து நமக்கு வழிகாட்டுவர்.

காந்தியடிகளின் எச்சரிக்கை

காலனியாதிக்க நூற்றாண்டுகளின் சிதைவுகளிலிருந்து பாரதத்தை மீளுருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். நம் படையெடுப்பாளர்களும் காலனியாளர்களும், நம்முடைய நாட்டையும் மக்களையும், பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக மட்டும் சுரண்டவில்லை; நம்முடைய தன்னிலைப்பாட்டை அழிப்பதற்கும் ஆவன செய்தனர். நம்முடைய ஒற்றுமை மற்றும் வலிமையின் ஆதாரமான பண்பாட்டுப் பெருமிதத்தைக் குலைப்பதற்கும் முயன்றனர். நாம் அனைவரும் பகிர்ந்துகொண்ட பண்பாட்டுப் பெருமிதத்தை எந்தெந்த நிறுவனங்கள் கட்டிக் காத்தனவோ, அவற்றையெல்லாம் சிதைப்பதற்கும் முனைந்தனர். வட்டார, இன, மொழி போன்ற செயற்கைப் பாகுபாடுகளின் நச்சு விதைகளைத் தூவினர்.

நாம் சுதந்திர நாடானவுடனேயே, காலனி ஆட்சியாளர்களால் நம்முடைய தனி மற்றும் கூட்டு மனங்களில் விதைக்கப்பட்ட நச்சு விதைகள் குறித்தும், அவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்தும் காந்தியடிகள் எச்சரித்தார்.

கோவிட் கையாண்ட விதம்

கடந்த இரண்டாண்டுகளாக, கோவிட் - 19 நோயின் நிழலிலேயே உலகம் ஒதுங்கியுள்ளது. நம்முடைய வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பெருமளவுக்கு கோவிட் பாதித்துவிட்டது. நெருக்கமானவர்களையும் அன்பானவர்களையும் இழந்திருக்கிறோம். பலருக்கு வாழ்வாதாரம் தொலைந்துவிட்டது. எனினும், பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலில், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் உள்ளார்ந்த வலிமை, முன்களப் பணியாளர்களின் தன்னலமற்ற சேவை மற்றும் தியாகம், விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞானச் சமூகத்தின் கடின உழைப்பு மற்றும் நுண்ணறிவு, தொழில் முனைவோரின் ஊக்கம் ஆகியவற்றின் துணைகொண்டு, வரலாறு காணாத இந்தச் சிக்கலை நாம் நல்லபடியாகவே கையாண்டிருக்கிறோம். உலகளாவிய சிக்கலையும் அதன் எதிர்மறை விளைவுகளையும் நாம் கையாண்ட விதம், வளர்ந்த நாடுகள் பலவற்றுக்கும் பாடம் போதிக்கும் எடுத்துக்காட்டாகவே உள்ளது.

கிட்டத்தட்டத் தரை மட்டம் என்னும் நிலையிலிருந்து நம்பமுடியாத அளவுக்குச் சுகாதார உள்கட்டுமானத்தையும் சேவை அமைப்புகளையும் உருவாக்கியுள்ளோம்; தடுப்பு மருந்துகளைக் கண்டுள்ளோம்; கோவிட் நோய்க்குத் தீர்வாகவும் அதன் பக்கவிளைவுகளுக்குத் தடுப்பாகவும் புதிய மருந்துகளையும் கண்டுள்ளோம். பணக்கார மற்றும் வளர்ந்த நாடுகள், பெருந்தொற்றினை வணிக வாய்ப்பாகப் பார்த்தன; தடுப்பூசி சுயநலத்தைப் பேண முற்பட்டன. ஆனால், உலக சகோதரத்துவத்தில் ஊறிய நம்முடைய பண்பாட்டின் எதிரொலியாக, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி மைத்ரி திட்டத்தின் கீழ், தடுப்பூசி ஆதரவை நாம் அளித்துள்ளோம்.

மூன்றாவது அலையை எதிர் கொள்ள முடியும்

கோவிட் - 19 நோயின் மூன்றாவது அலையில் இப்போது நம் நாடு இருக்கிறது. மருத்துவமனை மற்றும் நலவாழ்வுச் சேவைகளிலோ, உள்கட்டுமானங்களிலோ, மருந்துகளிலோ நமக்கு இப்போது பற்றாக்குறை இல்லை. தடுப்பூசியைப் பொறுத்தவரை, உலக சாதனையை ஏற்படுத்திவிட்டோம். கோவிட் மற்றும் புதிய வகைகளின் இந்தப் புதிய அலையை, கூடுதல் நம்பிக்கையோடும் முன்னேற்பாடுகளோடும் நம்மால் கையாளமுடிகிறது.

துடிப்பும் தொலைநோக்கும் கொண்ட தலைமையின்கீழ் நம்முடைய நாடு இப்போது முழுமையான புத்தாக்கம் காண்கிறது. நம்மைச் சுற்றியுள்ள காற்றிலேயே நேர்மறை எண்ணங்களின் வாசம் வீசுகிறது. 2047-ல், நம்முடைய சுதந்திர நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகையில், உலகத் தலைமையேற்கும் நாடாக பாரதத்தை உருவாக்கிவிடவேண்டும் என்னும் உறுதியின் உத்வேகம் ஊற்றெடுக்கிறது. பொது சுகாதாரம், கழிவகற்றம், கல்வி, உள்கட்டுமானம், ஆற்றல், பாலின ஒருமைப்பாடு, அறிவியல் – தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டுள்ளோம். புத்தாக்கத்திலும் தொழில் முனைப்பிலும் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறோம். நம்முடைய தொடக்க அலகுகள், உலகை வியக்கச் செய்கின்றன. கூடிய விரைவிலேயே நம்மிடம் 100 யுனிகார்ன்கள் – 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட தொடக்க அலகுகள் – இருக்கும் என்று எதிர்நோக்கப்படுகிறது.

மனித மைய வாழ்க்கைச் சிந்தனைகளும், இத்தகைய சிந்தனைகளின் விளைவாகச் சில வளர்ந்த நாடுகள் இயற்கையையும் இயற்கை ஆதாரங்களையும் சுரண்டியதன் விளைவுகளுமே, நம்முடைய பூமியைச் சிக்கலுக்குள் வீழ்த்தியுள்ளன.

சூழலையும் வானிலையையும் சிதைத்த நாடுகள் இன்னமும் தங்களின் வழிகளை நெறிப்படுத்திக்கொள்ளச் சித்தமாக இல்லை. பிரதமரால் முன்மொழியப்பட்டுள்ள பன்னாட்டு சூரிய கூட்டியக்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டுக்கான உறுதி, 2070இல் பாரதத்தைக் கார்பன் அற்றதாக ஆக்குவதற்கான துணிகர முடிவு ஆகிய யாவுமே, சுற்றுச்சூழல் பேரிடர்களிலிருந்தும் பேரழிவிலிருந்தும் அன்னை பூமியைக் காப்பதற்கான முயற்சிகளாகும்.

பாரதம் அடிமைப்பட்டிருந்த நிலையில், ஆற்றல்மிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான உலக அமைப்புமுறை, தவறானதாகவும் நிலைக்கமுடியாததாகவும் திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது. கண்முன்னேயே கலைந்துகொண்டிருக்கிறது. முற்றாகச் சிதைந்தும் விடும். ஆனால், புதிய உலக அமைப்புமுறை மேலெழுந்துகொண்டிருக்கிறது.

கோவிட்டும் வானிலையுமான மாபெரும் பூமிச் சிக்கலை வெற்றிகரமாகக் கையாள்வதில், பாரதம் தலைமையேற்று வழிநடத்துகிறது. வேகமாக மாறிக் கொண்டிருக்கும் இத்தகு சூழலைக் கணக்கில் கொண்டு, புதிய உலக அமைப்புமுறையில் புதிய பாரதத்தை உருவாக்கும் பணியில் பங்களிக்கவேண்டியது நம் அனைவரின் புனிதக் கடமையாகும்.

11 மருத்துவக்கல்லூரி அளித்தவர் பிரதமர்

நம்முடைய மாநிலமான தமிழ்நாடு, முன்னோக்குப் பாதையில் பயணிக்கிறது. கோவிட் மேலாண்மையில், நாம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். 2021-ல் ஏற்பட்ட புயல் மற்றும் பெருமழையின் பாதிப்புகளைக் குறைப்பதிலும் தடுப்பதிலும் நம்முடைய மாநில அரசு வெகு சிறப்பாகப் பணியாற்றியுள்ளது.

பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் தமிழ்நாடு உள்ளது. மனித மற்றும் தொழிலக மேம்பாட்டுக் குறியீடுகள் மெச்சத்தக்கவை. அடுத்தடுத்து வந்த மாநில அரசுகளின் ஆக்கபூர்வ பணிகளாலும், நடுவண் அரசின் ஒத்துழைப்பாலும், சமூக நீதி, கல்வி, நலவாழ்வுச் சேவைகள் போன்ற செயல்பாடுகளிலும், மக்களின் வாழ்நிலையை உயர்த்துவதிலும், கணிசமான வெற்றியை அடைந்திருக்கிறோம்.

ஒரே சமயத்தில் பதினொரு மருத்துவக் கல்லூரிகளை நம்முடைய மாநிலத்தில் திறந்து வைத்ததற்காக பிரதமருக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். இத்தனை மருத்துவக் கல்லூரிகள் ஒரே சமயத்தில் தொடங்கப்படுவது என்பது வேறெந்த மாநிலத்திலும் நடைபெறாத பெருஞ்சாதனையாகும்.

இப்பணிகளையெல்லாம் தொடர்ந்து செயல்படுத்தும்போது, நம்முடைய கூடுதல் கவனம் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதிலும் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும் இருக்கவேண்டும்.

மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இப்போதைய உடனடித் தேவை. அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான எதிர்மறை வேறுபாடுகள் கவலையைத் தோற்றுவிக்கின்றன. செலவுமிக்க தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேரமுடியாது. அரசுப் பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கை. நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் காரணமாக, இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனினும், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவேண்டியது நம்முடைய அவசரத் தேவை. உயர்கல்வியிலும், ஒருகாலத்தில் நம்முடைய பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும் பெருமையையும் மீண்டும் பெறுவதற்கு நாம் உழைக்கவேண்டும்.

உலகின் மிகத் தொண்மையான மொழி, தமிழேயாகும். இலக்கிய, பண்பாட்டு, ஆன்மிகச் செறிவுமிக்க மொழி. பல்வேறு பாரதீய மொழிகளுக்குத் தமிழ்மொழி பெருமை கூட்டியுள்ளது. நாட்டின் பிற பகுதிகளுக்குத் தமிழ்மொழி பரவுவதை ஊக்கப்படுத்தவேண்டும். மத்திய பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், பிரதமர் முனைப்பினால், மகாகவி சுப்பிரமணிய பாரதி இருக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களின் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய முனைப்புகள் முன்னெடுக்கப்படவேண்டும். இப்படிப்பட்ட முனைப்புகளை நம்முடைய பல்கலைக்கழகங்களும் முன்னெடுக்கலாம். தமிழ்மொழியின் வளமையின் முழுப் பயனையும் நம் நாடு பெறவேண்டும்.

இந்திய மொழிகளைப் பயிலவேண்டும்

தமிழ்மொழியின் பெருமையை நாட்டின் பிற பகுதிகளில் அறியச் செய்கிற அதே நேரத்தில், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல், நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயிலவேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை. சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வளர்ப்பதோடு, மொழிரீதியான அறிவு மற்றும் பண்பாட்டு இடைச் சேர்க்கை, நம் அனைவரையுமே வளப்படுத்தும்; நாட்டைச் செம்மைப்படுத்தும்; ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கு வழியமைக்கும்.

மகாகவி பாரதியாரின் அறைகூவல்

பாரத மாதா செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள். கடமைகளை ஆற்றுவதற்கான உறுதி ஏற்போம்.

2,000 ஆண்டுகளுக்கும் மேலாக, பாரதத்தின் பண்பாட்டு மையமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நம்முடைய வாழ்வின் அசைவுகள் அனைத்திலும் பக்தி உணர்வு பரவியுள்ளது. நாட்டிலேயே அதிகப்படியான எண்ணிக்கையில் கோயில்களைக் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தரமற்ற உணவு வழங்கினால் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து - அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.