ETV Bharat / state

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மின்கசிவு காரணமாக தீ விபத்து!

author img

By

Published : Jul 13, 2020, 3:36 PM IST

சென்னை: திருமங்கலம் பகுதியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu Housing Board apartment fire due to electrical leakage
Tamil Nadu Housing Board apartment fire due to electrical leakage

சென்னை திருமங்கலம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4 பிளாக்கில் சுமார் 606 அரசு அலுவலரின் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று (ஜூலை 13) காலை 4ஆவது பிளாக்கிலுள்ள மின்மாற்றியில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்துள்ளது. மேலும் வேகமாகப் பரவிய தீயானது இரண்டாவது மாடி வரை பரவியுள்ளது. இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட புகையைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பை விட்டு கீழே வந்து, திருமங்கலம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவலளித்தனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜே.ஜே. நகர் மற்றும் அம்பத்தூர் பகுதி தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.