ETV Bharat / state

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரி தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - தமீமுன் அன்சாரி

author img

By

Published : Sep 28, 2022, 7:12 AM IST

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரி தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - தமிமுன் அன்சாரி மனு
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரி தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - தமிமுன் அன்சாரி மனு

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார். பெட்ரோல் குண்டு சம்பவத்தில் யார் ஈடுபட்டாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள், தலைமைச் செயலாளர் இறையன்புவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமீமுன் அன்சாரி, “எதிர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த தினத்தில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்த சில நிபந்தனைகளோடு உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.

காந்தியை சுட்டுக்கொன்ற கலாச்சாரத்துக்கு சொந்தக்காரர்கள், காந்தி பிறந்தநாளில் பேரணி நடத்துவது நடைமுறைக்கு முரணானது. தமிழ்நாட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒரு தாய் மக்களாக, மாமன் மச்சானாக வாழும் நிலையில், சமூக நல்லிணக்கத்தை, பாரம்பரிய மரபுசார் ஒற்றுமைகளை, பாலடிக்கும் முயற்சியாக அக்டோபர் 2 பேரணியை பார்க்கிறேன்.

தமிழ்நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு இந்த பேரணியை அனுமதிக்கக் கூடாது. நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள அனுமதியை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

பெட்ரோல் குண்டு சம்பவத்தில் யார் ஈடுபட்டாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் அன்சாரியாக இருந்தாலும் சரி, அன்பழகனாக இருந்தாலும் சரி, ஆண்டனியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிரான திருமாவளவன் மனு... நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.