தேங்காய் எண்ணெய்க்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

author img

By

Published : Sep 18, 2021, 7:57 PM IST

தேங்காய் எண்ணெய்க்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி

தேங்காய் எண்ணெய்க்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (செப்.17) காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க இயலாத காரணமாக, எழுத்துப்பூர்வமான உரையை சமர்ப்பித்தார்.

அவர் எழுதிய குறிப்பில், "ஜிஎஸ்டி செலுத்துவோர், குறிப்பாக சிறு வணிகர்கள், ஜிஎஸ்டி என் போர்ட்டலில் அனைத்து தகவல்களும் ஆங்கிலத்தில் இருப்பதால், கணக்கு தாக்கல் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தனர். தமிழ்நாடு வர்த்தகத்துக்கு உகந்த மாநிலமாக இருப்பதால், அவர்களுக்கு தேவையான வசதியை செய்து தரவேண்டிய கடமை இருக்கிறது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஆண்டுகளில், தமிழில் இந்த சேவைவை வழங்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவையில் எங்கள் அரசாங்கம், ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை தமிழில் தருவதாக உறுதி அளித்துள்ளது. எனவே, ஜிஎஸ்டி போர்ட்டலில், தமிழில் சேவை வழங்குவதை விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி செலவு மற்றும் பயன்களை மாநிலத்தின் கண்ணோட்டத்தில் மறு ஆய்வு செய்ய இதுவே உகந்த நேரமாகும்.

மறைமுக வரி விதிப்பு

மேலும், நேரடி, மறைமுக வரி விதிப்பை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அடிப்படை மாற்றம் செய்வதற்கான நேரமும் வந்துவிட்டது. எங்கள் பங்காக, தமிழ்நாடு அரசு பொருளாதார நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், அறிஞர்கள் அடங்கிய குழுவை அமைக்கும் முயற்சியில் உள்ளோம். இதன்மூலம், ஒன்றிய, மாநில அரசுகளுக்கான நிதி அதிகார பகிர்வை மேம்படுத்த முடியும்.

மாநில அரசுகளின் உரிமை

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆனபின்னரும் ஜிஎஸ்டி தொடர்பான சட்டத்தில் 100 விழுக்காடு தெளிவு கிடைக்கவில்லை. மதுபானங்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து அளிக்கும் சேவைக்கு 18 விழுக்காடு வரி விதிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது. இதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்.பெட்ரோல், டீசல் மீது வரி விதிப்பது மாநில அரசுகளின் உரிமையாகும்.

அதிக வருவாய்

அதேநேரம் ஒன்றிய அரசு பெட்ரோல் மீது 500 விழுக்காடு மற்றும் டீசல் 1,000 விழுக்காடு வரை கடந்த 2014 முதல் வரியை உயர்த்தியுள்ளது. இந்த வரியில் மாநில அரசுகளுக்கு ஒரு பைசாகூட கிடைப்பதில்லை. ஒன்றிய அரசுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. ஒரு லிட்டருக்குக் குறைவான கொண்ட தேங்காய் எண்ணெய்க்கு 18 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

தென் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்துவது மிக அதிகம். கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்ற மற்ற சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது தேங்காய் எண்ணெய்க்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது. அனைத்து எண்ணெய்களுக்கு உள்ள வரி விதிப்பு போன்றே தேங்காய் எண்ணெய்க்கும் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடப்பேன்- தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என். ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.