ETV Bharat / state

பாஜக அடுத்ததாக மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 3:37 PM IST

C.M. MK Stalin: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி அடுத்து ஆட்சி அமைக்க முடியாது என காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்துள்ள தி.மு.க, அவர்களுக்கான பயிற்சி பாசறைகள் மூலமாக பணி குறித்த அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று (அக்.1) காணொளிக் காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளை பரிமாறிக் கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாகக் காணொளி மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம்மை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், புதுவை உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்.

அகில இந்திய கட்சிகளும், பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும், வலுவான மாநிலக் கட்சிகளும், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சி மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்க முடியாது. இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும், கடமையும் அதிகமாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பணியை கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே நாம் தொடங்கினோம். நமது வெற்றிக்கு அடித்தளமாக விளங்கக்கூடிய வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம். இதுவரையில் அவர்களுக்கான மூன்று பயிற்சி பாசறைக் கூட்டங்கள், தேர்தல் சிறப்பு மாநாடுகளைப் போல நடந்துள்ளன. அடுத்ததாக, வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலையிலும், சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி பாசறைக் கூட்டங்களில் நாம் எடுத்துச் சொன்னதை செயல்படுத்தினாலே போதும். முழுமையான வெற்றியை நாம் அடைந்து விடலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட 39 தொகுதிகளை வென்றோம் என்றால், நடக்க இருக்கும் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும், இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம்.

மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதனை வாக்குகளாக மாற்றுவதற்கு உழையுங்கள். உழைப்பும், செயல்பாடும்தான் வெற்றியைப் பெற்றுத் தரும். திட்டமிட்டு உழையுங்கள். தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற உழையுங்கள்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; போராட்டக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.