ETV Bharat / state

"திமுக குடும்ப கட்சிதான்" - பிரதமரின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

author img

By

Published : Jul 6, 2023, 5:28 PM IST

பாஜகவின் கொள்கைகளை திணிக்கவும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கவும்தான் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக குடும்ப கட்சி என்ற பிரதமரின் விமர்சனத்திற்கு, அண்ணாவால் உருவாக்கப்பட்ட, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட திமுக குடும்ப கட்சிதான் என்றும் பதில் அளித்துள்ளார்.

TN Chief Minister
மத்திய அரசு

சென்னை: இ.எஸ்.ஐ மருத்துமனை இயக்குநரும், முதலமைச்சர் ஸ்டாலினின் உறவினருமான ராஜமூர்த்தி இல்லத் திருமண விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 06) காலையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், "இன்றைக்கு நாடு போய்க்கொண்டிருக்கும் நிலை உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு நல்லாட்சி உருவாக்கித் தருவதற்கு நீங்கள் துணை நின்றீர்கள், அதனால் ஒரு ‘திராவிட மாடல்’ ஆட்சி எழுச்சி பெற்றது. இதேபோல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை. காரணம், இன்றைக்கு மத்தியில் இருப்பது பாஜக ஆட்சி. அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்கு நேர்மாறாக மக்கள் விரோத போக்கோடு மதத்தை, சனாதனத்தை இன்றைக்கு மக்களிடத்தில் திணித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்ற சட்டங்கள் இருக்கின்றன. அதை நீக்கிவிட்டு பொது சிவில் சட்டமாக கொண்டு வந்து பாஜகவின் கொள்கைகளை திணிக்கவும், அந்த ஆட்சியை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்திலும், மக்களுக்குத் துன்பங்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் இதனை செய்கிறார்கள். அரசியல்வாதிகள், பாஜவை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற துறைகளை வைத்து மிரட்டி கொண்டிருக்கும் ஒரு ஆட்சி மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடிக்கு மத்திய பிரதேசம் சென்றபோதுகூட திமுகவின் நினைவுதான் வந்திருக்கிறது. அங்கே பேசிய பிரதமர், குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சியில் இருக்கிறார்கள், கட்சி நடத்துகிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். நான் அடுத்த நாளே, இதே மண்டபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறபோது, குறிப்பிட்டுச் சொன்னேன். இது குடும்பக் கட்சிதான். அண்ணாவால் உருவாக்கப்பட்ட, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் என்பது குடும்பக் கட்சிதான். இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாடே தி.மு.க.வின் கட்சிதான், தமிழ்நாடே கருணாநிதியின் குடும்பம்தான் என்று அன்றைக்கே நான் அழுத்தம் திருத்தமாக சொன்னேன்" என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டம் அல்ல" - ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.