ETV Bharat / state

"பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டம் அல்ல" - ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

author img

By

Published : Jul 5, 2023, 6:54 PM IST

பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டம் அல்ல, அது அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் என்றும், அதனை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறையை அரசியலாகப் பார்க்காமல், அங்கு அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கூறினார்.

Jharkhand
ஆளுநர்

"பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டம் அல்ல" - ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

கோவை: ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று(ஜூலை 5) கோவை சென்றார். ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கோவை சென்ற அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீதும், தமிழ் இனத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும் மகத்தான அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அதனால்தான் இன்று மூன்று தமிழர்கள் இந்திய தேசத்தின் நான்கு மாகாணங்களின் ஆளுநராகப் பணியாற்றும் வாய்ப்பளித்துள்ளார். இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.

ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு, ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறேன். இன்று தமிழகத்திற்கு முதன்முறையாக நான் வருகை புரிந்துள்ளேன். ஆளுநரின் செயல்பாடுகள் அந்த மாநில அரசின் அணுகு முறையையும் பொறுத்து அமைந்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கு இயலாது. ஆளுநர் என்பவர் அதிகாரம் செய்வதற்கு வந்ததாக நாம் கருதக்கூடாது. அரசியல் சட்டத்தின்படி மாநில அரசு செயல்பட வேண்டும் என்பதை நிர்வகிக்கின்ற பொறுப்பில் ஆளுநர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது" என்றார்.

மணிப்பூர் வன்முறை குறித்து பேசிய அவர், "மணிப்பூரைப் பொறுத்தவரையில், அங்கு ஒரு தீர்ப்பினைத் தொடர்ந்து, இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே இருந்த பகை மேலோட்டத்திற்கு வந்துள்ளது. அதன் காரணமாகவே கலவரங்கள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது அங்கு படிப்படியாக கலவரங்கள் குறைந்து வருகின்றன.

அரசும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அது ஒரு உணர்வுப்பூர்வமான கலவரமாக இருக்கக்கூடிய காரணத்தினால் அதனைக் கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல. நாம் அனைவரும் அதனை அரசியலாகப் பார்க்காமல் மீண்டும் மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு, ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்தது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "யார் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் குடிதண்ணீரில் மலம் கலக்கப்பட்டுள்ளது. அதை அரசியலாக்குவது சரியாக இருக்குமா? அல்லது மீண்டும் அது போன்று நடைபெறாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குவது சரியாக இருக்குமா? என்பதை நாம் யோசிக்க வேண்டும்" என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சி.பி.ராதாகிருஷ்ணன், "யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். நான் முதலமைச்சர் ஸ்தானத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறிது காலம் பதவியிலிருந்து விலகி இருங்கள். உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் உங்களை மீண்டும் சேர்த்துக் கொள்வேன் என்ற உறுதியைத்தான் தந்திருப்பேன். அப்படி நடப்பதுதான் எதிர்காலத்தில் தமிழகத்தில் தார்மீகமான அரசியல் வளர்வதற்கு உதவும். அந்த வகையில்தான் இதனை பார்க்க வேண்டுமே தவிர, ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் மீது எடுக்கப்படுகின்ற பழிவாங்குகின்ற நடவடிக்கையாக இதனைப் பார்க்கக் கூடாது" என்று கூறினார்.

தொடர்ந்து பொது சிவில் சட்டம் குறித்து பேசிய அவர், "பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டம் அல்ல, அது அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம், இதனை அனைவரும் ஆதரிக்க வேண்டும். அதுதான் சமுதாயத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும். பொது சிவில் சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்? - ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே நாம் நம்பிக் கொண்டிருப்பது எதிர்காலத்தில் பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தாது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்க அனுமதியுங்கள் - அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.