சாலை கட்டுமானம், மழை நீர் வடிகால் பணிகள்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

author img

By

Published : Jan 22, 2023, 4:04 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின்

சாலைப் பணிகளின்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையிலும், பாதுகாப்பான முறையில் தடுப்புகளை அமைத்து மேற்கொள்ளுமாறும், தரக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி சாலைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சென்னை: பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணி, மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் ஜூன் 3ஆம் தேதி கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை இன்று(ஜன.22) நேரடியாகச் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், பசுமைக் கட்டட கட்டமைப்பாக மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஐந்து பர்லாங் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, செங்கேணி அம்மன் கோயில் தெரு, சிட்டி லிங்க் சாலை, நேதாஜி ரோடு மற்றும் வேளச்சேரி பிரதானச் சாலை ஆகிய 6 சாலைகளில் 16 கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 47 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த 6 சாலைகளில் ஐந்து பர்லாங் சாலை, பிள்ளையார் கோயில் தெரு மற்றும் செங்கேணி அம்மன் கோயில் தெரு ஆகிய 3 சாலைகளில் பணிகள் முழுவதும் முடிவு பெற்றுள்ளன. சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலை ஆகிய சாலைகளில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வேளச்சேரி பிரதான சாலையில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்த 6 சாலைகளில் இதுவரை 2 ஆயிரத்து 398 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிவு பெற்றுள்ளன. முடிவு பெறாத பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட 157-வது வார்டில் உள்ள ஆற்காடு சாலையில், 27 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் மதிப்பில் 475 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மனப்பாக்கம், கெருகம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய உட்புறச் சாலையாக உருவாகி வரும் நிலையில் அதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சாலைப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையிலும், பாதுகாப்பான முறையில் தடுப்புகளை அமைத்துப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

சாலைகள் அமைக்கப்படும்போது தரக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும், கட்டுமானப் பணிகளை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.