வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, ஆதி திராவிட நலத்துறையில் விடுதி கட்டடங்கள் - முதலமைச்சர் துவக்கி வைப்பு!

author img

By

Published : May 15, 2023, 4:17 PM IST

CM MK Stalin

தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் 500 பேருக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகளை வாங்க 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்குவதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்காக கட்டடப்பட்ட விடுதி மற்றும் பள்ளிக் கட்டடங்கள், தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் 500 பேருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்குவதற்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 42 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 21 விடுதிக் கட்டடங்கள், 16 கோடியே 59 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் 22 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலையினை உயர்த்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், அம்மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள்: அந்த வகையில், கரூர் மாவட்டம் கடவூர், மதுரை மாவட்டம் ரேஸ்கோர்ஸ், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சிவகங்கை மாவட்டம் - கொம்புக்காரனேந்தல், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இடங்களில் 18 கோடியே 89 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களுக்கான 9 விடுதிக் கட்டடங்கள்: திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம், தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் மற்றும் கோட்டூர், திருவாரூர் மாவட்டம் பேரளம், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 6 கோடியே 79 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளி மாணவியர்களுக்கான 5 விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் மருதன்கோன்விடுதி, மதுரை மாவட்டம் சொக்கிகுளம், சென்னை மாவட்டம் இராயபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 16 கோடியே 76 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 7 விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

மொத்தம் 42 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 21 விடுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிக் கட்டடங்கள் : காஞ்சிபுரம் மாவட்டம் ரெட்டமங்கலம், செங்கல்பட்டு மாவட்டம் மீனம்பாக்கம், கடலூர் மாவட்டம் சேப்பாக்கம், மேலவன்னியூர் மற்றும் சிதம்பரம் நந்தனார் பள்ளி, சேலம் மாவட்டம் வெள்ளிகவுண்டனூர், புதுக்கோட்டை மாவட்டம் முள்ளன்குறிச்சி, இராணிப்பேட்டை மாவட்டம் எலத்தூர், சேலம் மாவட்டம் தாத்தியாம்பட்டி ஆகிய இடங்களில் 16 கோடியே 59 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் 9 ஆதிதிராவிடர் பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் கீழுர், திருவண்ணாமலை மாவட்டம் புளியம்பட்டி, நீலகிரி மாவட்டம் மு.பாலாடா, நாமக்கல் மாவட்டம் செங்கரை ஆகிய இடங்களில் 22 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்கள், என மொத்தம் 39 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தாட்கோ மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக 23 வாகனங்களை வழங்குதல் : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படும் தாட்கோ நிறுவனத்தின், மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 2 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பில் 23 வாகனங்களை வழங்கிடும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவ்வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு வீடுகள் வாங்க மானியம் வழங்குதல் : 2022-23ஆம் ஆண்டிற்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் உறுப்பினர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தலா 11 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை வாங்க, அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதற்கட்டமாக 7 தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் துணைத் தலைவர் செ. கனிமொழி பத்மநாபன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜி.லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த.ஆனந்த், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, பழங்குடியினர் நல இயக்குநர் எஸ். அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலி.. விழுப்புரம் விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.