சூடுபிடிக்கும் நீட் விவகாரம்: கட்சித் தலைவர்களின் காரசார கருத்துகள்

author img

By

Published : Feb 5, 2022, 7:13 PM IST

ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கருத்து
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கருத்து ()

தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பாக, சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதென மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.#NEET pic.twitter.com/ydcJu4G6a1

    — CMOTamilNadu (@CMOTamilnadu) February 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, காங்கிரஸ் சார்பில் கு. செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. இராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீ.பி. நாகைமாலி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஏ.ஆர். ரகுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எம். சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "நீட் தேர்வு விலக்கு பெறுவது குறித்த அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை விவாதித்து சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவைப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மக்களுக்குப் புரிந்தது அண்ணாமலைக்கும் ஆளுநருக்குப் புரியாமல்போனது விந்தையாக உள்ளது. கல்வியை மாநிலப் பட்டியலில் நிரந்தரப்படுத்துவது குறித்து தனிநபர் மசோதாவை, நாடாளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் தாக்கல்செய்துள்ளார். அதிமுக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் எண்ணம் இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த எண்ணம் நீட் விலக்கு மசோதா இதை ஆதரிக்க அதிமுகவும் முன்வர வேண்டும் வருவார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்திற்குத் தடையாக இருக்காது" என்றார்.

அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது

இதனையடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, "ஆளுநர் சட்ட மசோதவைத் திருப்பி அனுப்பி உள்ளதற்குக் கண்டனம் தெரிவித்தோம். ஆளுநர் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆளுநரின் பணி சட்டப்பேரவைத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியது.

143 நாள்கள் கழித்து சட்டப்பேரவைக்கு அனுப்புகிறார். வேலூர் சி.எம்.சி. கல்லூரி விவகாரம் வேறு நீட் விவகாரம் வேறு. ஆளுநர் தன்னுடைய வரம்பை மீறியுள்ளார். திருப்பி அனுப்பும் அதிகாரம் கேள்வி கேட்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் சட்டப்பேரவை கூட்டப்படும் என முடிவு எடுக்கப்பட உள்ளது" என்றார்.

ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது

அதன்பின்னர் பேசிய ஜவாஹிருல்லா, "தமிழ்நாட்டு மக்களின் நலனை விரும்பும் அரசு என்ற அடிப்படையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்பி உள்ளது ஆளுநரின் வரம்பு மீறிய நடவடிக்கை.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு பரிந்துரையின் பெயரில் எடுக்கப்பட்ட முடிவின் பெயரில் மக்கள் பிரதிநிதிகள் விவாதித்து முடிவுசெய்த மசோதாவில் கருத்துச் சொல்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. தன்னுடைய சொந்த அபிப்பிராயத்தைச் சொல்லி ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்

அதன்பின் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இராமச்சந்திரன், "தமிழ்நாடு சமூக நீதியின் ஆணி வேராகத் திகழ்கிறது. தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரின் போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சட்ட வல்லுநர்களை ஆலோசித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சருக்கு அறிவுறுத்தி உள்ளோம்" என்றார்.

100 ஆண்டு கால சாதனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் சிந்தனைச்செல்வன், "எட்டு கோடி தமிழ்நாடு மக்களின் அரசியல் உரிமையைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இறையாண்மையை அரசியல் அமைப்பு சட்டத்தை ஆளுநரின் நடவடிக்கை கேலிக் கூத்தாகி உள்ளது. ஆளுநர் நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பி உள்ளது தமிழ்நாடு சமூக நீதியின் 100 ஆண்டு கால சாதனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என விசிக கருதுகிறது.

அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடும் நபர் ஆளுநர் அல்ல. அதிமுக கொள்கையை புறக்கணித்து பாஜகவின் கொள்கையைப் பின்பற்றி வருகிறதோ எனும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்க எடுக்கப்பட்ட முடிவை விசிக ஆதரிக்கிறது" என்று தெரிவித்தார்.

பாஜக ஆளுநர் வழியாக நடவடிக்கை எடுத்துள்ளது

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், "ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் பரிந்துரையின்பெயரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை 142 நாள்களுக்குப் பிறகு ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது கண்டிக்கத்தக்கது. மீண்டும் சட்ட மசோதாவைச் சிறப்புச் சட்டப்பேரவையில் கூட்டி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநரின் தான்தோன்றித்தனமான செயல் ஏற்புடையதல்ல. இந்தச் சட்டத்தின் தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளலாம் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல, பாஜக இந்தச் சட்டத்தைத் திருப்பி அனுப்ப ஆளுநர் வழியாக நடவடிக்கை எடுத்துள்ளது. வல்லுநர் குழுவுடன் கலந்து பேசி திருத்தங்கள் தொடர்பாக முடிவுசெய்யப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்" என்றார்.

டெல்லியில் பிரதமரைச் சந்தித்து முறையிட வேண்டும்

பாமக சார்பில் பேசிய வெங்கடேஸ்வரன், "கடந்த ஐந்து ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது நியாயமல்ல.

விரைவில் அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களும் டெல்லியில் பிரதமரைச் சந்தித்து முறையிட வேண்டும். நீட் தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக தன்னுடைய ஆதரவை அளிக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : நீட் விலக்கு மசோதா 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.