ETV Bharat / state

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

author img

By

Published : Mar 12, 2023, 5:48 PM IST

2022-23ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு நாளை (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைகிறது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர்.

இவர்களில் தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 3,185 மையங்களில் தேர்வினை எழுத உள்ளனர்.

புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7,728 மாணவிகள் என 14 ஆயிரத்து 710 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 மாணவர்கள், 8 ஆயிரத்து 776 மாணவிகள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என 23 ஆயிரத்து 747 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளில் 2,925 மாணவர்களும், 2,281 மாணவிகளும் என 5,206 பேர் எழுத உள்ளனர். சிறைவாசிகள் 90 பேர் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் 8 சிறைகளில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்

பாடத்தொகுதி வாரியாக விவரம்: 12ஆம் வகுப்பு மாணவர்களில் அறிவியல் பாடத் தொகுதியில் மொத்தம் 5,36,819 மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களில் 2,92,262 மாணவிகளும், 2,44,557 மாணவர்கள் அடங்கும். வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 2,54,045 மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களில் மாணவிகள் 1,25,598, மாணவர்கள் 1,28,446 அடங்கும். கலை பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 14,162 மாணவர்களில் 7,103 மாணவிகளும், 7,059 மாணவர்களும் தேர்வெழுத உள்ளனர்.

தொழிற்கல்வி பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 46,277 மாணவர்களில் மாணவிகள் 16,201, மாணவர்கள் 30,076 என தேர்வினை எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 405 பள்ளிகளிலிருந்து 180 தேர்வுமையங்களில் மொத்தம் 45,982 மாணவர்கள் தேர்வெழுதவுள்ளனர்.

இந்த தேர்வினை எந்தவித புகாரும் இல்லாமல் நடத்துவதற்காக மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மாவட்டங்களுக்கு மேற்பார்வை பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதும் மாற்றுதிறனாளிகள் 5,206 பேருக்கு தனி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசின் உத்தரவின் படி அவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் மாணவர்களுக்கான தேர்வினை எழுதுவதற்கான விதிமுறைகளையும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் விடைத்தாள் மற்றும் முகப்புத் தாள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வின் போது விடைத்தாளில் தேர்வர்களது புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து கையொழுத்திட்டால் மட்டும் போதுமானது.

கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர் பணியில் இருந்து வருகிறார். மேலும் சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வுக்கட்டுபாட்டு அறை: 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வையொட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்

இதனிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தேர்விற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி தேர்வினை எழுத வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த தேர்வுக்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அந்த வகையில், தேர்வு மையமாக செயல்படகூடிய பள்ளிகளில் காலையில் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்வினை கண்காணிக்கும் பணியில் நியமிக்க கூடாது. தேர்வுத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வின்போது பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள் தங்களது பணியின்போது தேர்வர்களை அச்சமுறும் வகையில் நடத்தக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன்களை பயன்படுத்த கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்த கூடாது.

அவர்கள் தங்களின் செல்போன்களை ஆப் செய்து , தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அதனையும் மீறி தேர்வு அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காதக வகையில் செயல்படுதல் வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் (கட்டாயமாக) சோதித்தல் அவசியம் இல்லை எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கி படிக்க அறிவுறுத்தவும், காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுத்து அதனை பூர்த்திச் செய்யவும் கூற வேண்டும். காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தேர்வுகள் துவக்கப்பட்டு, மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.