ETV Bharat / state

தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கை நிராகரிப்பு - சு.வெங்கடேசன் எம்பி வேதனை

author img

By

Published : Feb 11, 2023, 1:04 PM IST

வழக்காடு மொழியாக தமிழ்
வழக்காடு மொழியாக தமிழ்

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கும் கோரிக்கை தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநில மொழிகளில் உயர்நீதிமன்றங்களில் வழக்காடுவதற்கு மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறதா?, இதற்காக மாநில அரசுகளிடம் ஒத்துழைப்பு எந்தளவுக்கு கேட்கப்பட்டுள்ளன?, மாநில மொழிகளிலும் நீதி முறைமை அமைய பொது சட்ட அகராதியை மத்திய அரசு தயாரித்துள்ளதா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, "உச்சநீதிமன்றம் மற்றும் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் அதன் நடைமுறைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே அமையும் என அரசியல் சட்டப்பிரிவு 348(1)(ஏ) கூறுகிறது. மேற்கண்ட பிரிவு (1) (ஏ)-ல் தெரிவிக்கப்பட்டதை கடந்து ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன்அனுமதியுடன், உயர்நீதிமன்ற முதன்மை இருக்கை அமைந்துள்ள அம்மாநிலத்தில் அந்த நீதிமன்ற நடைமுறைகள் இந்தியில் அல்லது அலுவல் நோக்கங்களுக்கு அம்மாநிலங்களில் பயன்படுத்தப்படும் வேறு மொழிகளில் அமைவதை அங்கீகரிக்கலாம் என அரசியல் சட்டப்பிரிவு 348(2) கூறுகிறது.

21.05.1965 தேதியிட்ட அமைச்சரவை குழு முடிவின்படி, உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் தவிர்த்த மொழிகளை பயன்படுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நடைமுறைகளில் இந்தியை பயன்படுத்த 1950ல் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில், அந்தந்த மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க அந்தந்த மாநில அரசுகள் முன்மொழிவுகளை அனுப்பியிருந்தன. இதுதொடர்பாக பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், முன்மொழிவுகளை ஏற்க முடியாது என தெரிவித்துவிட்டது'' என மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியதாக சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுவது இன்று வரை கைகூடவில்லை என்பது வேதனைக்குரியது. நாட்டின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு இந்திய நீதி முறைமையில் மாநில மொழிகள் இணைக்கப்படுவதற்கான காலம் வந்துவிட்டது. ஆனாலும் இக்கோரிக்கை ஈடேறாதது, நீதித்துறையில் தொடரும் அசமத்துவத்தின் சாட்சி" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் விரைவில் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.