ETV Bharat / state

கொடநாடு வழக்கை விசாரித்த சிபிசிஐடி டிஜிபி, சிறைத்துறை டிஜிபி ஓய்வு

author img

By

Published : Oct 31, 2022, 12:09 PM IST

Etv Bharat
Etv Bharat

கொடநாடு வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபிசுனில்குமார் சிங் ஆகியோர் இன்று ஓய்வு பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் மிக பரபரப்பாக பேசப்படும் வழக்கான கொடநாடு, அதிமுக அலுவலக கலவர வழக்கு மற்றும் ராமஜெயம் கொலை வழக்கு என பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் மற்றும் தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் ஆகியோர் இன்று (அக்.31) ஓய்வு பெறுகின்றனர்.

டிஜிபி ஷகீல் அக்தர் கடந்து வந்த பாதை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷகீல் அக்தர் ஐபிஎஸ் தமிழ்நாடு காவல்துறையில் 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். ஷகீல் அக்தர் தர்மபுரியில் ஏஎஸ்பியாக பணியைத் தொடங்கினார். தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாகவும், சிவகங்கை எஸ்பியாகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்பி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக ஷகில் அக்தர் பணியாற்றி உள்ளார்.

சென்னை போக்குவரத்து வடக்கு துணை ஆணையராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைவருக்கு சிறப்பு பாதுகாப்பு பணியிலும், இந்திய உள்நாட்டு விவகார அமைச்சருக்கு தனி செயலாளராகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். காஞ்சிபுரம் மாவட்ட டிஐஜி, நிர்வாக பிரிவு ஐஜி, போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர், தலைமையிட ஐஜி, தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபி, சிறப்பு காவல்படை கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்
சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்

ஜனாதிபதி விருது பெற்றவர்: ஷகில் அக்தர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருந்தபோது, ரேசன் அரிசியை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்தியவர்களை கண்டறிந்தது, 2002 ஆம் ஆண்டு மதுரை துணை ஆணையராக இருந்தபோது, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த, பெங்களூரில் வைத்து என்கவுண்டர் செய்த சம்பவம் உள்ளிட்ட நடவடிக்கைக்காக பாராட்டு பெற்றவர்.

என்கவுண்டருக்கு பிறகு தீவிரவாதிகள் மிரட்டலால் ஷகீல் அக்தருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்த போது அவருக்கு பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக டெல்லியில் பணியில் இருந்துள்ளார். சிறப்பாக பணி புரிந்ததற்காக மூன்று முறை ஜனாதிபதி விருதை ஷகில் அக்தர் பெற்றுள்ளார். பின்னர், சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட ஷகீல் அக்தர், பரபரப்பாக பேசப்பட்டு வரும் முக்கிய வழக்கான கொடநாடு வழக்கு, அதிமுக அலுவலக கலவர வழக்கு, ராமஜெயம் கொலை வழக்கு என முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

டிஜிபி சுனில்குமார் சிங் கடந்து வந்த பாதை: 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சுனில் குமார் சிங், நீலகிரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய இடத்தில் எஸ்பியாகவும், ராமநாதபுரம், திருச்சி, மதுரை ஆகிய இடத்தில் டிஐஜியாகவும், திருச்சி, சேலம், திருநெல்வேலியில் ஆணையராகவும் சுனில் குமார் சிங் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு சென்னை தலைமையிட கூடுதல் கமிஷ்னராகவும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும், தற்போது சிறைத்துறை டிஜிபியாகவும் சுனில் குமார் சிங் பணியாற்றி வந்துள்ளார்.

தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங்
தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங்

கள்ளச்சாராயம் ஒழிப்பு: புதுக்கோட்டை எஸ்பியாக சுனில் குமார் சிங் பணியாற்றியபோது, கொடிக்கட்டி பறந்த கள்ளச்சாராயம் விற்பனையை, தீவிர நடவடிக்கையால் ஒழிக்கப்பட்டன. அதேபோல, கூடுதல் டிஜிபியாக சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் சுனில் குமார் சிங் பணியாற்றியபோது தான், முதன்முறையாக ஆன்லைன் மூலமாக ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொடநாடு விவகாரம்; சென்னையில் மும்முரமாக நடக்கும் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.