2 நாட்களாகியும் பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேக்கம்.. பயணிகள் அவதி!

2 நாட்களாகியும் பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேக்கம்.. பயணிகள் அவதி!
Perungalathur: பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீர் இரண்டு நாளாகியும் வெளியேறாமல் நிற்பதால் பயணிகள் கடும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் சாலைகளிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதால், மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மழை பெய்து இரண்டு நாட்கள் ஆகியும் பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி உள்ள மழை நீர் அப்புறப்படுத்தாமல் இருப்பதால், பொதுமக்கள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளது.
மழை நின்று இரண்டு நாட்கள் ஆகியும் இந்த சுரங்கப் பாதையில் உள்ள மழை நீர் வெளியேற்றப்படாததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில்வே நிலையத்திற்கு வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாததால் பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழை நீரை ரயில்வே அதிகாரிகள் அல்லது தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், பயணிகள் நலன் கருதி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
