ETV Bharat / state

4 ஆசிரியர்களுக்கு நியமன ஒப்புதல் கோரிய வழக்கு: கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

author img

By

Published : Jun 2, 2021, 4:39 PM IST

சென்னை உடற்கல்வி கல்லூரியில், 4 ஆசிரியர்களுக்கு நியமிக்கப்பட்ட ஆண்டில், நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் -  உயர் நீதிமன்றம்
சென்னை உடற்கல்வி கல்லூரியில், 4 ஆசிரியர்களுக்கு நியமிக்கப்பட்ட ஆண்டில், நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவன உதவி பேராசிரியர்கள் உள்பட நான்கு பேருக்கு, அவர்கள் நியமிக்கப்பட்ட ஆண்டில் இருந்தே நியமன ஒப்புதல் வழங்க கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி கல்லூரியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு முறையே, புனித கலாமேரி, லதா, ஜான்சன் பிரேம்குமார், குளோரி டார்லிங் மார்கரெட் ஆகியோரை கல்லூரி நிர்வாகம் 2000ஆம் ஆண்டு நியமித்தது.

இவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் கோரி கல்லூரி நிர்வாகம், கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு விண்ணப்பித்தபோது, நான்கு பேருக்கும் 2007ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக ஒப்புதல் அளித்து, கல்லூரி கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, பணியில் சேர்ந்த 2000ஆம் ஆண்டு முதல் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி, நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் பதிலளித்த கல்லூரிக் கல்வி இயக்குனரகம், மனுதாரர்கள் பணியாற்றும் சிறுபான்மைக் கல்வி நிறுவனத்தில் கூடுதலாக உருவாக்க அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இவர்கள் நியமிக்கப்பட்டதால் 2007ஆம் ஆண்டு முதல் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், அதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், கல்லூரி தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து நான்கு பேரும் பணி ஓய்வு, பதவி உயர்வால் காலியான இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது எனக் கூறி, 2007ஆம் ஆண்டில் பணி நியமனம் செய்ததாக அளித்த ஒப்புதலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், இவர்கள் நான்கு பேரும் நியமிக்கப்பட்ட ஆண்டில் இருந்து அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி மீதம் உள்ள சம்பள தொகையை ஆறு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, இதை கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கும் அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.