ETV Bharat / state

தீபாவளி பண்டிகைக்கு முன்னேற்பாடு.. தீ விபத்து சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 6:49 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து சிகிச்சை அளிக்க 95 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து சிகிச்சை அளிக்க 95 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்

Special Wards for Fire Accidents: தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் தீ விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தீயணைப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதும், தீ விபத்து இல்லாத தீபாவளி என்கின்ற வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பதற்குரிய நேரம், பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு

அந்த வகையில் விபத்துகள் நேராத வகையில் இந்த தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்று அனைவரும் கருதுகிறோம். அதையும் மீறி எதாவது தீ விபத்துகள் ஏற்பட்டால் அதற்குரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதே போல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் என்று 95 இடங்களில் தீ விபத்திற்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

95 மருத்துவமனைகளில், 750 படுக்கைகளுடன் இந்த சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கும் தேவையான மருந்து போன்ற உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு தீக்காய பிரிவு பழமை வாய்ந்த
ஒன்றாகும்.

1973-ஆம் ஆண்டு 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட சிறப்பு தீக்காய பிரிவு இன்றைக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கே சிறந்த அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களும் தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டினை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த சிறப்பு வார்டு மூலம் பயன்பெற்று வருகிறார்கள். 24 மணி நேரமும் அறுவை சிகிச்சை அரங்குகள் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2020-இல் தீபாவளி பண்டிகையின் போது 15 பேர் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துள்ளார். 2021-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 30 பேர் பாதிக்கப்பட்டனர், இறப்பு எதுவும் இல்லை. 2022-ஆம் ஆண்டை பொறுத்தவரை 38 பேர் பாதிக்கப்பட்டு இறப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே கடந்த 2 ஆண்டுகளாகத் தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்தில் இறப்புகள் இல்லை என்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இன்று சிறப்பு தீக்காய பிரிவில் 20 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுத் திறந்து
வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வெண்டிலேட்டர் கருவிகளுடன் ஆண்களுக்கான வார்டில் 12 படுக்கைகளும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வார்டில் 8 படுக்கைகளும் உள்ளது. டெங்குவினால் இந்தாண்டு 6 ஆயிரத்து 345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவும். டெங்கு பாதிப்புகள் மருத்துவத் துறையின் சீரிய நடவடிக்கைகளினால் கட்டுக்குள் இருக்கின்றது. நேற்று ஒருநாள் பாதிப்பு 54 ஆகும். மருத்துவமனைகளில் தற்போது வரை 525 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உங்க பரம்பரைக்கே இனி புற்று நோய் வராது: இதை மட்டும் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.